ஆஸ்திரேலியாவில் டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட முன்னணி அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிவிட்டனர்.


சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிய அணிகள் பிரதான போட்டிகளுக்கு முன்பு பயிற்சி போட்டியில் ஆடி வருகின்றன. இந்திய அணி தனது முதல் பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்திய அணி தனது இரண்டாவது பயிற்சி போட்டியில் நாளை நியூசிலாந்து அணியை சந்திக்கிறது.




பயிற்சி போட்டியில் 15 வீரர்களும் களமிறங்கலாம். இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவிற்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் 360 டிகிரி ப்ளேயர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், சமீபகாலமாக இந்தியாவின் தவிர்க்க முடியாத வீரராக இருந்து வருகிறார்.


ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த பயிற்சி போட்டியில் அதிரடியாக அரைசதம் விளாசிய சூர்யகுமார் யாதவிற்கு, சூப்பர் 12 சுற்றை கருத்தில் கொண்டு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை நடைபெற உள்ள பயிற்சி ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக தீபக்ஹூடா அல்லது ரிஷப்பண்ட் களமிறங்குவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.




இந்தியாவுடன் மோதும் நியூசிலாந்து அணியிலும் கான்வே, ஜிம்மி நீஷம் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மைதானங்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியான தட்பவெப்பநிலையிலேயே இருக்கும் என்பதால் இந்த மைதானத்தில் ஆடுவதில் நியூசிலாந்து வீரர்களுக்கு எந்த சிரமும் இருக்காது என்று எதிர்பார்க்கலாம். பயிற்சி ஆட்டம் என்றாலும் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே விரும்புவார்கள்.


இந்திய அணி பந்துவீச்சில் தன்னை இன்னும் மெருகேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி வரும் ஞாயிற்றுக்கிழமை சூப்பர் 12 சுற்றில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : T20 World Cup 2022: முதல் போட்டியிலே சறுக்கிய முன்னாள் சாம்பியன்கள்..! சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறுவார்களா..?


மேலும் படிக்க : IND vs AUS Warm Up Match: ஹர்திக் பாண்ட்யா அவுட்டானதை கொண்டாடினாரா சூர்யகுமார் யாதவ்..? வைரலாகும் வீடியோ..!