இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ. சார்பில் ஆண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஐ.பி.எல். டி20 தொடர் மூலமாக பி.சி.சி.ஐ.யின் வருமானம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.


ஆண்களுக்கு மட்டுமே ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைககள் கடந்த சில ஆண்டுகளாக வலுத்து வந்தது. இந்த நிலையில், பி.சி.சி.ஐ. சார்பில் இன்று ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.






பி.சி.சி.ஐ.யின் தலைவர் சவுரவ் கங்குலி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான மகளிர் ஐ.பி.எல். போட்டி நடத்த பி.சி.சி.ஐ. ஒப்புதல் அளித்துள்ளது.  


மகாராஷ்ட்ராவின் தலைநகர் மும்பையில் இன்று பி.சி.சி.ஐ.யின் 91வது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயலாளர் ஜெய்ஷா மற்றும் பிற நிர்வாகிகள் பங்கேற்றனர்.


இந்த கூட்டத்தில், மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளும், கிரிக்கெட் ரசிகர்களும் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்த மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பின்னர், அடுத்தாண்டு முதல் மகளிர் ஐ.பி.எல். போட்டி நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அடுத்தாண்டான 2023ம் ஆண்டு நடைபெற உள்ள முதல்  மகளிர் ஐ.பி.எல். போட்டித் தொடரில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன.  மகளிர் டி20 உலலக கோப்பை நிறைவு பெற்ற பிறகு, மகளிர் ஐ.பி.எல். போட்டியை உடனே நடத்த பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.


5 அணிகள் மட்டுமே பங்கேற்க உள்ள முதல் மகளிர் ஐ.பி.எல். தொடரில் மொத்தம் 22 போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் மொத்தம் 18 வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்துக்கொள்ளலாம் என்றும், ஒரு அணியில் அதிகபட்சம் 6 வெளிநாட்டு வீராங்கனைகள் இருக்க அனுமதிக்கவும் பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தற்போது வரை மகளிர் ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணை உறுதிப்படுத்தபடவில்லை. ஆண்கள் ஐ.பி.எல். போட்டிகள் நிறைவடைவதற்கு முன்பே பெண்கள் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017ம் ஆண்டு மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது முதல், இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.


இந்திய மகளிர் அணி சமீபத்தில் 7வது முறையாக ஆசிய கோப்பையை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.