சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்.எஸ். தோனிக்கு பிறகு இந்தியளவில் அதிக ரசிகர்களை கொண்டவராக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இருக்கிறார். 


கடந்த ஆண்டுவரை விராட் கோலி தனது 71வது சதத்தை விளாசுவார் என அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக கோலி மோசமான பார்ம் அவுட் காரணமாக தவித்தார். இதையடுத்து, இந்திய அணியில் அவரத் இடம் குறித்து விமர்சகர்கள் மற்றும் நிபுணர்கள் கேள்வி எழுப்பினர். 


இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான கபில் தேவ் மற்றும் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பலர் கோலி முன்பு போல் கிரிக்கெட் விளையாடாத காரணத்தினால் மூன்று பார்மேட்டில் இருந்து விலகி ஏதாவது ஒரு பார்மேட்டில் ஓய்வுபெற்று விளையாட வேண்டும் என அறிவுறுத்தினர். 


இப்படி பலரும் பலவிதமான கருத்துகளை முன்வைத்தபோது கோலியின் ரசிகர்கள் கோலி நிச்சயம் 71 வது சதத்தை பூர்த்தி செய்வார் என நம்பினர். அதிலும், ஒரு ரசிகர் ஒருபடி மேலே சென்று விராட் கோலி தனது 71வது சதத்தை எட்டும்வரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என அறிவித்தார். அதற்கு ஆதாரமாக விராட் கோலியில் ரசிகர் அமன் அகர்வால் ஸ்டேடியத்திற்கு பிளக்ஸ் போர்ட்டு ஒன்றையும் கொண்டு வந்திருந்தார். அப்போது அந்த புகைப்படமும் இணையத்தில் படுவேகமாய் வைரலானது. 


இந்தநிலையில்தான், அரபு எமிரேட்ஸில் 2022 ஆசிய கோப்பையின் போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 சதத்துடன் தனது மறுபிரவேசத்தை தொடங்கினார். அதன்பிறகு அவரது ரசிகரும் தனது திருமணத்திற்கு பெண் பார்க்க தொடங்கிவிட்டார். 


அந்த சதத்தை தொடர்ந்து விராட் கோலி, வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒருநாள் தொடரில் தனது 72வது சதமும், கடைசியாக நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தனது 73 மற்றும் 74வது சதத்தை பதிவு செய்தார். 






இந்த சூழலில் நேற்றுமுன் தினம் விராட் கோலி தனது 74வது சதத்தை அடித்தபோது, அவரது ரசிகர் அமான் அகர்வாலுக்கு திருமணம் நடைபெற இருந்த நாளாக இருந்துள்ளது. அப்போது, அமான் அகர்வால் தான் அணிந்திருந்த திருமண உடையோடு ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதில், ”நான் 71வது சதத்தை கேட்டேன் ஆனால் அவர் எனது சிறப்பு நாளான திருமண நாளில் 74வது சதம் அடித்தார்” என பதிவிட்டார். 


தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. ட்விட்டரில், இது 24 மணி நேரத்திற்குள் 1 மில்லியன் பார்வைகளையும் 33.32k க்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது.


சச்சின் சாதனையை முறியடிப்பாரா கோலி? 






கடந்த இரண்டரை ஆண்டுகளாக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்த விராட்கோலி, கடந்தாண்டு இறுதி முதல் மீண்டும் தனது அசுரத்தனமான பேட்டிங்கிற்கு திரும்பியுள்ளார். அவரது இந்த மிரட்டலான பேட்டிங் முன்னணி அணிகளுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விராட்கோலி இதுவரை ஒருநாள் போட்டிகளில் 46 சதங்களை விளாசியுள்ளார். சர்வதேச அளவில் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். விராட்கோலி விரைவில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.