21ம் நூற்றாண்டு பிறந்தது முதல் இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சி என்பது மிக மிக அசாத்தியமானது என்றே சொல்லலாம். ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் கடந்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது மற்றொரு மைல் கல்லாக அமைந்தது. ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமித்தது பிசிசிஐ.
நைட் வாட்ச்மேனாக வரும் சிராஜ்:
கே.கே.ஆர். அணிக்காக கோப்பையை வென்று தந்த கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் தோல்வி. அதிலும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியது இந்திய அணி.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முதல் இன்னிங்சில் முதல் நாளான நேற்று இந்திய அணி 2வது விக்கெட்டை இழந்த பிறகு ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்தது. வழக்கமாக இதுபோன்ற நேரத்தில் முக்கிய வீரர்களை களமிறக்காமல் டெயிலண்டர்களை களமிறக்குவது வழக்கம். அவ்வாறு களமிறங்கும் டெயிலண்டர் பந்துவீச்சாளர்களை நைட் வாட்ச்மேன் என்று அழைப்பார்கள்.
வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் இருக்கும்போது சிராஜ் ஏன்?
நேற்றைய போட்டியில் ஆட்டம் முடிய 2 ஓவர்கள் இருந்த நிலையில், ஜெய்ஸ்வால் அவுட்டானார். இதையடுத்து நைட் வாட்ச்மேனாக முகமது சிராஜ் களமிறங்கினார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அவர் அஜாஸ் படேலின் முதல் பந்திலே எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார்.
இந்திய அணி நைட் வாட்ச்மேன் வீரரை களமிறக்க வேண்டும் என்ற முடிவு சரியாக இருந்தாலும், முகமது சிராஜை களமிறக்கியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏனெ்னறால், பின்வரிசையில் அசத்தக்கூடிய வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் உள்ளனர். இவர்கள் இருவரில் ஒருவரை களமிறக்கியிருக்கலாம் என்றே பலரும் கூறுகின்றனர்.
கம்பீர் பயிற்சிக்குப் பின் தடுமாற்றம்:
வாஷிங்டன் சுந்தரை களமிறக்கியிருந்தால் கண்டிப்பாக அவர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழாமல் சிறப்பாஜ ஆட்டத்தை ஆடியிருப்பார். முகமது சிராஜ் அவுட்டானது மட்டுமின்றி முக்கிய விக்கெட்டான விராட் கோலி துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதனால், நேற்றைய ஆட்டத்திலே இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.
கம்பீர் பயிற்சியாளர் ஆன பிறகு இந்திய அணி சில தடுமாற்றமான முடிவுகளை எடுத்து வருகிறது. அதன் தாக்கத்திலே இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் ஒயிட்வாஷ் ஆகியது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது மிக மிக மோசமான சாதனை ஆகும்.
தொடர்ந்து சொதப்பல் முடிவுகள்:
அந்த போட்டியில் ஆடுகளத்தை இந்திய கேப்டன் ரோகித் சர்மா தவறாக கணித்து பேட்டிங்கைத் தேர்வு செய்ததே போட்டி கையை மீறிச் சென்றதற்கு காரணம் ஆகும். நீண்ட அனுபவம் மிகுந்த கேப்டன் ரோகித் சர்மா களத்தை, அதுவும் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியில் ஆடுகளத்தை தவறாக கணித்தது பலருக்கும் அதிர்ச்சியாகவே அமைந்தது.
46 ரன்களுக்கு ஆல் அவுட்டானதன் அதிர்ச்சியின் எதிரொலியே அந்த டெஸ்ட்டை இந்தியா இழந்தது. மேலும், டெஸ்ட் போட்டிகளுக்கான நிதானமே இல்லாமல் இந்திய வீரர்கள் ஆடும் விதமும் ரசிகர்களுக்கும், முன்னாள் வீரர்களுக்கும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. இந்த சூழலில், நைட் வாட்ச்மேனாக முகமது சிராஜை களமிறக்கியதும் இந்திய அணியின் தவறான முடிவாகவே பார்க்கப்படுகிறது.