இந்தியா வந்துள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி ஏற்கனவே தாங்கள் ஆடிய முதல் இரண்டு டெஸ்ட் போட்டியையும் பரிதாபமாக பறிகொடுத்தது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
பேட்டிங்கில் மீண்டும் சொதப்பிய இந்தியா:
முதல் நாளான இன்று டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா சுழலில் சிக்கி 235 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆட்டத்தை தொடங்கிய இந்திய பேட்ஸ்மேவன்கள் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் போல சொதப்பாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சொந்த மண்ணில் ஆடும் கேப்டன் ரோகித் சர்மா பவுண்டரிகளாக விளாசினாலும் 18 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் சுப்மன்கில்லுக்கு ஒத்துழைப்பு தந்த ஜெய்ஸ்வால் 30 ரன்களில் அவுட்டானார்.
கோலி ரன் அவுட்:
ஆட்டம் முடிய இரண்டு ஓவர்கள் மட்டுமே இருந்த காரணத்தால் முகமது சிராஜ் நைட் வாட்ச்மேனாக களமிறக்கப்பட்டார். ஆனால், அவர் முதல் பந்திலே அஜாஸ் படேல் சுழலில் சிக்கி எல்.பி.டபுள்யூ ஆனார். இதையடுத்து, விராட் கோலி களமிறங்கினார். பவுண்டரி அடித்து தன்னை நிலைநிறுத்த கோலி முயற்சித்த நிலையில் இன்றைய நாளின் கடைசி ஓவரில் ஒரு ரன் எடுக்க முயற்சித்து ஆட்டம் முடிய 3 பந்துகள் இருந்த நிலையில் 4 ரன்னில் ரன் அவுட்டானார் விராட் கோலி. இதனால், இந்திய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியை காட்டிலும் இந்திய அணி 49 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய அணியின் கைவசம் 6 விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில் களத்தில் சுப்மன் கில்லும், ரிஷப்பண்டும் உள்ளனர்.
காப்பாற்றப்போவது யார்?
இந்தியாவின் சுழல் எடுபட்டது போல நியூசிலாந்து அணியிலும் அஜாஸ் படேல், ப்ளிப்ஸ், ரவீந்திரா, சோதி சுழலில் மிரட்ட காத்துள்ளனர். இதனால், இந்திய பேட்டிங் இவர்களை சமாளித்து இமாலய ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவினால் இந்த நூற்றாண்டில் முதல்முறையாக தொடரை முழுமையாக சொந்த மண்ணில் பறிகொடுத்த மோசமான சாதனையை இந்திய அணி படைக்கும்.
முதல் நாளிலே 14 விக்கெட்டுகள் காலியாகியிருப்பதால் இந்த போட்டிக்கு கண்டிப்பாக முடிவு உண்டு என்பதை மட்டும் கூற இயலும். இந்திய பேட்ஸ்மேன்கள் கில், ரிஷப், சர்பராஸ் கான் சிறப்பான ஆட்டத்தை காட்டுவார்களா? ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, அஸ்வின் பேட்டிங்கில் கைகொடுப்பார்களா? என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.