இந்திய கிரிக்கெட் வீரர்களின் தீபாவளி விடுமுறையை பிசிசிஐ ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்றது. அதாவது, நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1 ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பிசிசிஐ அதிரடி உத்தரவு:
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன், இந்திய அணி நிர்வாகம் வீரர்களுக்கு எந்த விதமான தளர்வுகளையும் அளிக்கும் மனநிலையில் இல்லை, எனவே, வீரர்களின் தீபாவளி விடுமுறையையும் அணி நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி இரண்டு நாள் பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது.
இந்திய அணி எதிர்வரும் அக்டோபர் 30 மற்றும் 31 தேதிகளில் பயிற்சியில் ஈடுபடும். இதன் காரணமாக வீரர்கள் அனைவரும் நாளைய தினம் மும்பை வரவேண்டும் என்றும் பிசிசிஐ தரப்பில் இருந்து உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த பயிற்சியில் எந்தவொரு வீரருக்கு விடுப்போ அல்லது ஓய்வோ கிடையாது என்பதையும் பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஏனெனில் ஏற்கெனவே தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியதுடன் தொடரையும் இழந்துள்ள இந்திய அணி, மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று ஒயிட்வாஷை தவிர்க்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.