நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி கைபற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியை நியூசிலாந்து அணி வென்ற நிலையில், 2வது டி20 போட்டியை இந்திய அணி வென்றபோது தொடரை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.


இந்தநிலையில், இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை இந்திய அணி திருப்பி அனுப்பியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் ரஞ்சி தொடரின் காலிறுதி ஆட்டத்தில் விளையாடி வருகிறார். 


வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர்:


நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முகேஷ் குமார் அணியில் இடம் பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் கூட முகேஷ் குமாருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணியை விட்டு வெளியேறிய அவர், ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்தில் பெங்கால் அணியுடன் இணைந்து விளையாடி வருகிறார். ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டம் பெங்கால் மற்றும் ஜார்கண்ட் அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாளில் பெங்கால் சார்பில் முகேஷ் குமாரும் பந்துவீசி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  


சர்வதேச போட்டியில் அறிமுகமாக காத்திருக்கும் முகேஷ் குமார்:


முகேஷ் குமார் இதுவரை இந்திய அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடவில்லை. இந்தத் தொடருக்கு முன்னதாக இலங்கைக்கு எதிரான டி20 அணியிலும் அவர் சேர்க்கப்பட்டார். ஆனால் அவருக்கு அந்தத் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய டெஸ்ட் அணியில் முகேஷ் குமாரும் சேர்க்கப்பட்டார். ஆனால் அவருக்கு இன்னும் டெஸ்டிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 


முதல் தர போட்டி மற்றும் ஐபிஎல்:


பீகாரின் கோபால்கஞ்சில் பிறந்த முகேஷ் குமார், வங்கதேசம்-ஏ அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஏ அணிக்காக விளையாடினார். அந்த தொடரில், முகேஷ் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகேஷ் குமார் இதுவரை 35 முதல் தர போட்டிகளில் 134 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். லிஸ்ட்-ஏவில் 24 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.இம்முறை ஐபிஎல் தொடரில் 5.50 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியுள்ளது.