இந்தியாவுக்கு எதிரான தனது மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டிக்கு முன்னதாக, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி ஃபெர்குசன், இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி பாணி அவர்களுடைய கேப்டன் கேன் வில்லியம்சனின் கேப்டன்சியைப் போல இருப்பதாக கூறியுள்ளார்.
ஹர்திக் - ஃபெர்குசன்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டி புதன்கிழமை அகமதாபாத்தில் நடைபெறுகிறது. தொடர் தற்போது 1-1 என சமநிலையில் இருப்பதால் இந்த போட்டியை வென்று தொடரை வெல்ல இரு அணிகளும் முனைப்புடன் உள்ளன. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 இன் போது பெர்குசன் பாண்டியாவின் தலைமையில் விளையாடினார், அதில் அவர்கள் அணியான குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் சீசனிலேயே பட்டத்தை வென்றது. ஆனால் இந்த வருடம் ஐபிஎல் 2023க்கு முன்னதாக பெர்குசன் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு விற்கப்பட்டு இருந்தாலும், கென் வில்லியம்சன் ஹர்திக்க்கின் குஜராத் அணிக்கு ஏலம் சென்றுள்ளார். இந்த தொடரில் இருவரும் இணைந்து விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
பாண்டியாவை புகழ்ந்த ஃபெர்குசன்
"நான் அவரை (பாண்டியா) மிகவும் உயர்வாக கருதுகிறேன். நிச்சயமாக, குஜராத்தில் அவருக்கு கீழ் விளையாடியது ஒரு சிறப்பான அனுபவம். அவர் குழுவிற்குள் ஒரு தெளிவான தலைவராக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். ஆனால் அதே நேரத்தில் கேன் வில்லியம்சன் போல அறிவார்ந்து செயல்படக்கூடிய ஒருவர். அணியில் உள்ள அனைவருக்கும் அதற்கென ஒரு நேரம் வைத்திருக்கிறார், எல்லோரையும் தெளிவாக பயன்படுத்துகிறார். எனவே, நீங்கள் பார்ப்பது போலவே, அவர் இந்திய அணிக்கும் நன்றாக கேப்டன்சி செய்துள்ளார். அணியை அவர் வழிநடத்தும்போது அவர் காட்டும் உடல் மொழி அருமையாக இருக்கும், அது விளையாடுபவர்களுக்கும் எனர்ஜியை கடத்தும்", என்று ஃபெர்குசன் கூறினார்.
பந்துவீச்சுக்கு தலைமையா?
இளம் பந்துவீச்சு அணிக்கு தலைமை நீங்களா என்ற கேள்விக்கு, "அங்கு டிம் சவுதி மற்றும் ட்ரெண்ட் போல்ட் இருப்பதால், நாங்கள் எங்களை ஒரு பேக்-அப் ஆப்ஷனாகதான் நினைக்க விரும்புகிறோம். எங்கள் பந்துவீச்சு தாக்குதலுக்கு அவர்கள் தான் தலைவர்கள். அதே நேரத்தில், அனைவரின் குரலும் அணியால் கேட்கப்படுகிறது. இளம் வீரர்களின் குரலும் கேட்கப்பட வேண்டும். நிச்சயமாக, எனக்கு இங்கு கொஞ்சம் கூடுதலான அனுபவம் உள்ளது அது அவர்களுக்கும் தெரியும், அதனால் தலைமை பொறுப்பை எடுத்து நடத்த வேண்டிய அவசியம் இல்லை", என்று கூறினார்.
உலகக்கோப்பைக்கு தயாராக உதவும்
பெர்குசன், இந்தியாவில் அதிக விக்கெட்டுகளை எடுக்க தவறிய டிக்னரையும் பாராட்டினார். இரண்டாவது T20I இல், மந்தமான லக்னோ ஆடுகளத்தில் கடைசி ஓவரில் ஐந்து ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் டிக்னர் தோல்வியுற்றார். ஆனாலும், "பிளேர் டிக்னர் கூட, அவர் இங்கு வந்து சிறப்பாகச் செயல்பட்டு, இங்கு விளையாடிய A தொடரின் நிலைமைகளைப் புரிந்துகொண்டார். அவருக்கு அனுபவம் உள்ளது, மேலும் அவர் இந்த ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் அதைக் கொண்டு வந்துள்ளார், மேலும் அவர் நிறைய நல்ல விஷயங்களை வழங்கியுள்ளார். ஒரு தொடரில் இருந்து பெற நிறைய அனுபவங்களும் கற்றல்களும் உள்ளன, வெளிப்படையாக இந்திய அணி தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுகிறது. நாங்கள் இங்கு புதிதாக நிறைய கற்றுக்கொள்கிறோம். இந்த சுற்றுப்பயணம் எவ்வாறு சென்றது என்பதை மதிப்பாய்வு செய்து, ஆறு மாதங்களில் வர இருக்கும் உலகக் கோப்பையில், இந்திய ஆடுகளங்களில் எப்படி செயல்படுவது என்பதற்கான கற்றல்களை நிச்சயம் எடுத்துக்கொள்ளலாம்," என்று கூறி முடித்தார்.