நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. ஒருநாள் தொடரை முழுவதுமாக இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியை நியூசிலாந்து அணி வென்ற நிலையில், 2வது டி20 போட்டியை இந்திய அணி வென்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. 


இதனிடையே டி20 தொடரை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில், கடந்த சில டி20 போட்டிகளாக தொடர்ந்து சொதப்பி வரும் இஷான் கிஷான் இந்த முறையும் சொதப்பினார். 1 ரன்னில் அவர் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்ததாக ராகுல் திரிபாதி உள்ளே வந்தார். 






மறுபுறம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சுப்மன் கில் நியூசிலாந்து பந்து வீச்சை விளாசி தள்ளினார். ஒரு கட்டத்தில் சுப்மன் கில் - ராகுல் திரிபாதி இருவரும் நியூசிலாந்து விழிபிதுங்கும் அளவுக்கு அதிரடி ஆட்டம் ஆடினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ராகுல் திரிபாதி 22 பந்துகளில் 44 ரன்களில் வெளியேற, கேப்டன் ஹர்திக் பாண்டியா அடுத்ததாக களமிறங்கினார். 


இந்தநிலையில், மறுமுனையில் நங்கூரமாய் நின்று எதிரணி பந்துவீச்சாளர்களின் பந்துகளை பொளந்த சுப்மன் கில் 54 பந்துகளில் 5 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் டி20 தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.