நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தச் சூழலில் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஈடன் கார்டன் மைதானத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சர்வதேச டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்த முறை ஈடன் கார்டன் மைதானத்தின் மைந்தர்களில் ஒருவரான ராகுல் டிராவிட் முதல் முறையாக அங்கு பயிற்சியாளராக களமிறங்குகிறார். எனவே இந்தப் போட்டி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மண் ஆகிய இருவரும் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் இருவருக்கும் ஈடன் கார்டனுக்கும் பெரிய தொடர்பு உண்டு. குறிப்பாக 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மோசமான ஸ்கோரில் ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து ஃபாலோ ஆன் செய்து ஆடிய இந்திய அணியில் ராகுல் டிராவிட் 180 ரன்களும், விவிஎஸ் லக்ஷ்மண் 281 ரன்களும் எடுத்தனர். அது இந்திய கிரிக்கெட்டில் எப்போதும் மறக்க முடியாத ஒரு இன்னிங்ஸாக அமைந்தது.
இவை தவிர ஈடன் கார்டன் மைதானத்தில் ராகுல் டிராவிட் 9 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி 962 ரன்கள் விளாசியுள்ளார். அங்கு 4 சதம் மற்றும் 3 அரைசதங்களை அவர் அடித்துள்ளார். இவரைவிட அதிகமாக விவிஎஸ் லக்ஷ்மண் மட்டுமே இங்கு ரன்கள் அடித்துள்ளார். அந்த அளவிற்கு ராகுல் டிராவிட்டிற்கு இது ஒரு ராசியான மைதானமாக அமைந்துள்ளது. இப்படி அவருடைய மனதிற்கு மிகவும் நெருக்கமான மைதானங்களில் ஒன்று தான் ஈடன் கார்டன் மைதானம்.
இந்தப் போட்டிக்காக இந்திய வீரர்கள் கொல்கத்தா வந்து இறங்கியவுடன் அனைவரும் தங்களுடைய தங்கும் விடுதிக்கு சென்றனர். ஆனால் ராகுல் டிராவிட் மட்டும் உடனடியாக ஈடன் கார்டன் மைதானத்திற்கு நேரடியாக சென்று அந்த ஆடுகளத்தை ஆய்வு செய்தார். அது எப்போதும் தன்னுடைய பணிக்கு மிகுந்த அர்பணிப்பு உடன் இருக்கும் டிராவிட்டின் குணத்தை நன்கு வெளிப்படுத்தும் செயலாக அமைந்தது. அத்துடன் அவர் ஆடுகளத்தின் அமைப்பாளரிடமும் பேசியுள்ளார்.
அதன்படி இன்றைய போட்டிக்கான ஆடுகளத்தில் 160 ரன்கள் நல்ல ஸ்கோராக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்திய அணியை பொருத்தவரை இன்றைய போட்டியில் அவேஷ் கான், ருதுராஜ் கெய்க்வாட், சாஹல் ஆகியோர் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. எனினும் இதுகுறித்த இறுதி முடிவு டாஸ் போடுவதற்கு முன்பாக எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு இந்தியா-பங்களாதேஷ் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு பிறகு சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ராசியான மைதானத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் வென்று ஒயிட் வாஷ் செய்யுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க: 'ஆனந்த யாழை மீட்டுகிறாய் மொமெண்ட்'- ஹர்திக் பாண்டியாவும் மகள் அகஸ்தியாவும்..வைரல் வீடியோ !