நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தச் சூழலில் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் முதல் 6ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் சேர்த்தனர். அதன்பின்னர் 7ஆவது ஓவரில் இஷான் கிஷன் 29 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அதேபோல் ரிஷப் பண்ட்டும் 2 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 10 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஒரு புறம் விக்கெட் விழுந்தாலும் மற்றொரு புறம் ரோகித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். அவர் 27 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகள் வரலாற்றில் 30ஆவது அரைசதம் கடந்து ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் விராட் கோலியின் 29 அரைசதங்கள் என்ற சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார். அரைசதம் கடந்த பிறகு ரோகித் சர்மா 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அதன்பின்பு இந்திய அணியின் ரன்விகிதம் சற்று குறைந்தது. குறிப்பாக வெங்கடேஷ் ஐயர் 20 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். இதனால் 17 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.
கடைசி 3 ஓவர்களில் இந்திய அணி சற்று அதிரடி காட்ட முயன்றது. குறிப்பாக ஹர்ஷல் பட்டேல் பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்து ஒரளவு நம்பிக்கை அளித்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு தீபக் சாஹர் கடைசி ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடித்தார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.
மேலும் படிக்க: கடைசி வரைக்கும் ருதுராஜ் இல்லையே... ட்விட்டரில் வறுத்து எடுத்த ரசிகர்கள் !