இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆடி வருகின்றனர். டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய கேப்டன் ரோகித்சர்மா – சுப்மன்கில் இருவரும் ஆட்டத்தை தொடங்கினர்.
போட்டி தொடங்கியது முதல் ரோகித்சர்மா – சுப்மன்கில் ஜோடி அதிரடியாக ஆடினர். தனது அதிரடி வாணவேடிக்கையை காட்டிய ரோகித்சர்மா ஒருநாள் போட்டியில் தனது 30வது சதத்தை விளாசி அசத்தினார். சுமார் 3 ஆண்டுகளாக சதமடிக்காத ரோகித்சர்மா மீண்டும் சதமடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சதமடித்த ரோகித்சர்மா உடனடியாக ப்ராஸ்வெல் பந்தில் போல்டானார். அவர் 85 பந்துகளில் 9 பவுண்டரி, 6 சிக்ஸருடன் சதமடித்து ஆட்டமிழந்தார். அவருடன் பேட்டிங்கில் அசத்திய சுப்மன்கில்லும் சிறிது நேரத்தில் சதமடித்து அசத்தினார். அவர் 78 பந்துகளில் 13 பவுண்டரி 5 சிக்ஸருடன் 112 ரன்கள் எடுத்து டிக்னெர் பந்தில் அவுட்டானர்.
இந்திய கேப்டன் ரோகித்சர்மா ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். ஆனால், அவர் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் கடைசியாக பெங்களூரில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதி கடைசியாக சதம் விளாசியிருந்தார். டெஸ்ட் போட்டியில் கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 2021ம் ஆண்டு சதம் விளாசியிருந்தார்.
ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசி 3 ஆண்டுகள் ஆகியிருந்தது அவரது ரசிகர்களுக்கும், இந்திய அணிக்கும் சற்று கடினமானதாகவே இருந்தது. மேலும், அவரது பேட்டிங் மீதும் விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், இந்திய கேப்டன் ரோகித்சர்மா தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சதம் விளாசியுள்ளார். மேலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 30வது சதத்தை விளாசி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்தார்.
மேலும், இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன்கில்லும் அபாரமாக ஆடி சதம் விளாாசியுள்ளார். அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசியிருந்த நிலையில், இன்றைய போட்டியிலும் சதம் விளாசியுள்ளார். 23 வயதே ஆன சுப்மன்கில் ஒருநாள் போட்டியில் விளாசும் 4வது சதம் இதுவாகும். சுப்மன்கில் இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் ஆடி 4 சதம், 1 இரட்தைட சதம், 5 அரைசதங்களுடன் 1254 ரன்களை விளாசியுள்ளார்.
இந்திய அணிக்கு சுப்மன்கில் – ரோகித்சர்மா அளித்த சிறப்பான தொடக்கத்தால் இந்திய அணி சிறப்பாக ரன்களை குவித்து வருகிறார். விராட்கோலி 36 ரன்களுக்கும், இஷான்கிஷான் 17 ரன்களுக்கும் அவுட்டாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.