IND Vs NZ 2nd Test: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, வரும் 24ம் தேதி புனேவில் தொடங்குகிறது.


வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்ப்பு:


மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வரும் 24ம் தேதி தொடங்க உள்ள, நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவுலிங் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார் .


வாஷிங்டன் தற்போது ரஞ்சி டிராபி 2024-25 இல் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வருகிறார். இரண்டாவது சுற்று ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக 152 ரன்கள் மற்றும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணிக்கு முக்கிய பங்கு வகித்து கவனம் ஈர்த்துள்ளார். இந்த நிலையில் தான் அவர் இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.


டெஸ்ட் கிரிக்கெட்டில் வாஷிங்டன் சுந்தர்:


சர்வதேச கிரிக்கெட்டில் 77 விக்கெட்டுகளையும் 1888 ரன்களையும் எடுத்துள்ள வாஷிங்டன் சுந்தர், பிளேயிங் லெவனின் கீழ் வரிசையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்படும் திறன் கொண்டுள்ளார்.  2021 இல் பிரிஸ்பேனில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய வரலாறு படைத்த இந்தியாவின் பிளேயிங் லெவனில் வாஷிங்டன் சுந்தரும் இடம்பெற்று இருந்தார். பிரிஸ்பேன் மைதானத்தில் 31 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா பெற்ற முதல் டெஸ்ட் தோல்வி அதுவாகும்.


எவ்வாறாயினும், தமிழ்நாடு அணியை பொறுத்தவரை, ரஞ்சி கோப்பையில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகுவது ஒரு பேரிழப்பாக கருதப்படுகிறது. ஓமனின் மஸ்கட்டில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பையில் இந்தியா ஏ அணியில் சேருவதற்காக அணியில் இருந்து, ஏற்கனவே கேப்டன் ஆர். சாய் கிஷோர் விலகி உள்ளார். இந்த நிலையில் ரஞ்சி அணியில் இருந்து வாஷிங்டன் சுந்தரும் விலகுவது தமிழ்நாடு அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


இந்திய அணி படுதோல்வி:


3 போட்டிகள் கொண்ட நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. குறிப்பாக கடைசி ஆறு விக்கெட்டுகள் வெறும் 15 ரன்களுக்கு வீழ்ந்தன. இது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில், மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று தொடரைக் கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது.


இந்திய அணி:


ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (து.கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் (வி.கீ), துருவ் ஜூரல் (வி.கீ), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் , முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர்.