இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 259 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
300-ஐ கடந்த இலக்கு:
இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சில் ஆடி வரும் நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டாம் லாதம் 86 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. டாம் ப்ளண்டெல் 30 ரன்களுடனும், கிளென் ப்லிப்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நேற்றைய ஆட்ட நேர முடிவிலே நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நியூசிலாந்து அணியின் கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் அவர்கள் மேலும் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும் அவர்கள் 400 ரன்கள் முன்னிலை பெறுவார்கள்.
சமாளிக்குமா இந்தியா?
மைதானத்தில் பந்து நன்றாக சுழல்வதால் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி எஞ்சிய விக்கெட்டுகளை இழக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இந்திய அணிக்கு எப்படியும் 350 அல்லது அதற்கு மேல் இலக்காக நிர்ணயிக்கப்பட உள்ளது.
இன்று 3வது நாள் ஆட்டமே நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் ஆடுகளம் பந்துவீச்சுக்கு மிகவும் உகந்ததாக காணப்படும். குறிப்பாக, அடுத்த 2 நாட்கள் ஆடுகளம் சுழலுக்கு ஏற்றதாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் பேட்டிங் வரிசைக்கு மிகப்பெரிய சவாலாக 2வது இன்னிங்ஸ் இருக்கும் என்று கருதப்படுகிறது.
கம்பேக் தருமா பேட்டிங் வரிசை?
இந்திய அணியின் பேட்ஸ்மேன்களான ஜெய்ஸ்வால், ரோகித், சுப்மன்கில், விராட் கோலி, ரிஷப்பண்ட், சர்பராஸ் கான் ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, அஸ்வின் என யாருமே முதல் இன்னிங்சில் நீண்ட இன்னிங்ஸ் ஆடவில்லை. குறிப்பாக, அனுபவ பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.
கடந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர்கள் சிறப்பாக ஆடினாலும் அவர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். ஏற்கனவே இந்திய அணிக்கு 300 ரன்களுக்கு மேல் இலக்கு உள்ள நிலையில், இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு சவாலானதாக அமைந்துள்ள இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நெருக்கடியில் இந்தியா:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தற்போது முதல் இடத்தில் உள்ள இந்திய அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் அடுத்த ஆடும் 6 டெஸ்ட் போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற சவாலான நிலை ஏற்படும். இந்திய அணி அடுத்து ஆட உள்ள தொடர் ஆஸ்திரேலிய தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.