இந்திய வீரர்கள் உலகின் மற்றவர்களை காட்டிலும் சுழல் பந்துகளை நன்றாக எதிர்கொள்ளக்கூடியவர்கள் என்ற கண்ணோட்டம் இருக்கிறது. உண்மையில் அவர்கள் அப்படி கிடையாது என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல் கூறியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்கிறது. இதில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி வீழ்த்தியது.
இதனை தொடர்ந்து நேற்று (அக்டோபர் 24) புனேவில் உள்ள மகாராஷ்ட்ரா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 79.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி சொதப்பலான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தியது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார் விராட் கோலி 1 ரன்னில் வெளியேறினார்.
மற்ற வீரர்களும் சொற்ப ரன்களிலேயே விக்கெட்டை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக இந்திய அணியை பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா 38 ரன்கள் எடுத்தார். முன்னதாக சமீப காலங்களாகவே சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறலாக பேட்டிங் செய்து தோல்விக்கு காரணமாகி வருகிறார்கள். இந்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்ன்கள் என்றாலே ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ள கூடியவர்கள் என்பது பேச்சு வழக்கு என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல் கூறியுள்ளார்.
காலம் மாறிப் பேச்சு:
இது தொடர்பாகா அவர் பேசுகையில்,"இந்த நவீன இந்திய வீரர்கள் உலகின் மற்றவர்களை காட்டிலும் சுழல் பந்துகளை நன்றாக எதிர்கொள்ளக்கூடியவர்கள் என்ற கண்ணோட்டம் இருக்கிறது. உண்மையில் அவர்கள் அப்படி கிடையாது. அவர்களும் உலகின் மற்ற பேட்ஸ்மேன்களை போன்றவர்களே. கங்குலி, கம்பீர், லக்ஷ்மன், டிராவிட் ஆகியோரது காலத்துடன் அது முடிந்தது. ஸ்பின்னர்களுக்கு எதிராக சச்சின் சிறந்தவர். அந்த சகாப்தத்துடன் அது முடிந்தது.
உண்மையில் இந்திய ஸ்பின்னர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தரமாக செயல்படுகிறார்கள். ஆனால் அவர்களது பேட்ஸ்மேன்கள் அவ்வளவு தரம் இல்லை. இதற்கு காரணம் ஐபிஎல் தொடரில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சை பார்த்தால் உடனே அவர்கள் புகார் செய்கின்றனர்”முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல் கூறியுள்ளார்.