புனேவில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இதுவரை மொத்தம் 10 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்.


இரண்டாவது டெஸ்ட்:


நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்கிறது. இதில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி வீழ்த்தியது. இதனை தொடர்ந்து நேற்று (அக்டோபர் 24) புனேவில் உள்ள மகாராஷ்ட்ரா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.


இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 79.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், இந்திய அணியின் பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார். அதே போல், மற்றொரு வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 


புனேவில் கலக்கும் தமிழக வீரர்:


இந்த நிலையில் இன்று (அக்டோபர் 25) நடைபெற்று வரும் இரண்டாவது இன்னிங்ஸிலும் வாஷிங்டன் சுந்த சிறப்பாக பந்து வீசி வருகிறார். அதாவது இரண்டாவது இன்னிங்ஸில் தற்போது வரை 14 ஓவர்கள் வீசியுள்ள அவர் 43 ரன்களை விட்டுகொடுத்து 3 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இவரது சுழலில் டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளனர். அந்தவகையில் புனேயில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் வாஷிங்டன் சுந்தர்.






சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் மூலம் அறிமுகமானவர் வாஷிங்டன் சுந்தர். கடைசியாக அதே ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இவருக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கினார்.அதை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்.