IND Vs NZ 2nd Test: இந்திய அணி ஆல்-அவுட் ஆனதை தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


இந்தியா Vs நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி:


இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பெங்களூரில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று, தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, புனேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.


அசத்திய தமிழக வீரர்கள்:


இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து வீரர்களுக்கு, இந்தியா சார்பில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்ற்உம் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் கடும் நெருக்கடி கொடுத்தனர். இவர்களை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் எதிரணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் 79.1 ஓவர்கள் முடிவில், 259 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அரைசதம் விளாசினார். இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தினர்.


ஏமாற்றமளித்த ரோகித் - கோலி: இந்தியா ஆல்-அவுட்


தொடர்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலேயே ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று போட்டி தொடங்கியதும் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஜெய்ஷ்வால் மற்றும் கில் தலா 30 ரன்களில் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி, வெறும் 1 ரன்னில் நடையை கட்டினார். ரிஷப் பண்ட் 18 ரன்களிலும், சர்ஃப்ராஸ் கான் 11 ரன்களிலும், அஷ்வின் 4 ரன்களிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். ஓரளவு தாக்குப்பிடித்த ஜடேஜா 38 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 156 ரன்களுக்கு இந்திய அணி ஆல்-அவுட் ஆனது.


வலுவான நிலையில் நியூசிலாந்து:


நியூசிலாந்து அணி சார்பில், மிட்செல் சாண்ட்னர் 7 விக்கெட்டுகளையும், கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளையும், டிம் சவுதி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். மேலும் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியுற்றதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற, மீதமுள்ள 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது.