இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதி வரும் முதலாவது டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது.  284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேற்று ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து, தொடக்கத்திலே வில் யங்கின் விக்கெட்டை இழந்தது. இந்த நிலையில், இன்று 5வது நாள் ஆட்டத்தை தொடங்கியது.




நியூசிலாந்து வீரர்கள் டாம் லாதமும், வில்லியம் சோமர்வில்லேவும் மேற்கொண்டு விக்கெட் விழுந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக ஆடினர். அவ்வப்போது மட்டும் ஓரிரு ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிப்பதற்கு இந்திய கேப்டன் ரஹானே சுழற்பந்து வீச்சு ஜாம்பவான்கள் அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் படேலை மாறி, மாறி பயன்படுத்தினார். மறுமுனையில் இஷாந்த் சர்மாவும், உமேஷ் யாதவும் வேகப்பந்துவீச்சில் குடைச்சல் கொடுத்தனர்.


ஆனாலும், இந்திய அணியின் பந்துவீச்சைத் திறம்பட சமாளித்து ஆடிய நியூசிலாந்து வீரர்கள் மிகவும் நிதானமாக ஓரிரு ரன்களாகவே சேகரித்தனர். உணவு இடைவேளையின் வரை நியூசிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 35 ஓவர்களில் 79  ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி முதல்பாதி ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை. டாம் லாதம் 96 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 35 ரன்களுடனும், வில்லியம் சோமர்வில்லே 109 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.  






அஸ்வின் 12 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். 2 ஓவர்களை மெய்டனாக வீசியுள்ளார். அக்‌ஷர் படேல் 7 ஓவர்களில் 6 ரன்களை விட்டுக்கொடுத்து 3 ஓவர்களை மெய்டனாக வீசியுள்ளார். ஜடேஜா 6 ஓவர்களில் 11 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். ஆட்டம் முடிய இன்னும் அரைநாட்களே உள்ளதால், இந்திய அணி வெற்றி பெற நியூசிலாந்தின் 9 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டியுள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவை தோற்கடிக்க மேற்கொண்டு 205 ரன்களை சேர்க்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இதனால், உணவு இடைவேளைக்கு பிறகு இந்தியாவின் பந்துவீச்சில் அனல்பறக்கும் என்று எதிர்பார்ககலாம். நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதைக் காட்டிலும் டிரா செய்யும் நோக்கிலே ஆடும் என்று எதிர்பார்க்கலாம்.


உணவு இடைவேளைக்கு பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணியின் வில்லியம் சோமர்வில்லேவை உமேஷ் யாதவ் அவுட்டாக்கினார். அவர் பந்தில் சோமர்வில்லே சுப்மன்கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண