நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது.
இந்தியா - நியூசிலாந்து போட்டி:
இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நேற்று தொடங்கியது. கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெங்களூரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் நேற்றும் பெங்களூரில் மழை தொடர்ந்து பெய்து வந்தது.
தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் கூட போட இயலாத அளவிற்கு பாதிப்பு இருந்தது. மதிய உணவு இடைவேளகை்கு பிறகு ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இன்றும் மழை பெய்யுமா?
இரண்டாவது நாளான இன்றைய ஆட்டம் காலை 9.15 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், டாஸ் காலை 8.45 மணிக்கு போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி. பெங்களூர் மற்றும் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்கள், கர்நாடகாவின் வடக்கு மற்றும் தெற்கு உள் மாவட்டங்களில் வரும் அக்டோபர் 18ம் தேதி ( நாளை) வரை கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. பெங்களூரில் அடுத்த 3 அல்லது 4 நாட்கள் இதே வானிலை நிலவும் என்று அறிவித்துள்ளது. மேலும், உடுப்பி, உத்தர்கன்னடா, சிவமோகா, சிக்கமகளூர், சித்ரதுர்கா, டாவாங்கேரே மற்றும் துமகுரு மாவட்டங்களிலும் மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரசிகர்கள் கவலை:
பெங்களூரில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளதால் இன்றும் போட்டி தொடங்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு இன்னும் 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றாலே போதும்.
இந்திய அணி இந்த தொடருக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆட உள்ளது. அதற்கு முன்பு இந்த தொடரை இந்திய அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்வதை உறுதி செய்யலாம். இதனால், இந்திய வீரர்கள் இந்த தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். பெங்களூர் மைதானத்தில் சிறப்பான மழைநீர் வடிகால் வசதி இருப்பது தனிச்சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.