இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக டாஸ் கூட போடாமல் முடிவுக்கு வந்துள்ளது. 


இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட்:


கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் வங்கதேச அணியை வீழ்த்தியது இந்திய அணி. இதனைத்தொடர்ந்து நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் என்ற அறிவிப்பு வெளியானது.


ஆட்டம் ரத்து:


அதன்படி இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 16) பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகவே பெங்களூரில் தொடர் கனமழை பெய்து வந்ததால், முதல் டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் இருந்தது.  


அதே நேரம் காலை நேரத்தில் மழை சற்று நின்றதால் ஆட்ட நடைபெறும் சூழல் தான் நிலவியது. ஆனால் பெங்களூருவில் மீண்டும் மழை ஆரம்பித்தது. இதனால் சின்னச்சாமி மைதான ஊழியர்கள் உடனடியாக தார்பாய் கொண்டு மைதானத்தில் பல்வேறு பகுதிகளையும் மூடினர். இதனைத் தொடர்ந்து மழை கொஞ்சம் கூட குறையாததால், உணவு இடைவேளை கொடுக்கப்பட்டது. இதனிடையே இந்திய வீரர்களும் உள் அரங்குகளில் பயிற்சியை மேற்கொள்ள தொடங்கினர்.  இதனிடையே மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் பார்வையிட்டனர்.


ஆட்ட நேரம் மாற்றி அமைப்பு:




இதனைத் தொடர்ந்து மைதான ஊழியர்களும் ஆய்வு மேகொண்டனர். ஆனால் ஈரம் அப்படியே இருப்பதால் போட்டி நடைபெறுவதற்கான சூழல் இல்லை என்று கூறப்பட்டது. இதன் அடிப்படையில் முதல் நாள் ஆட்டத்தை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் 2வது நாள் ஆட்டத்திற்கான நேரத்தை நடுவர்கள் மாற்றி அமைத்துள்ளனர்.


2வது நாள் ஆட்டத்தின் காலை செஷன் 9.15 மணிக்கு தொடங்கி, 11.30 வரை நடக்கும் என்றும், பின்னர் உணவு இடைவேளை 40 நிமிடங்கள் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2வது செஷன் 12.10 மணிக்கு தொடங்கி மதியம் 2.25 மணி வரை நடக்கும் என்றும், மாலை செஷன் 2.45 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணி வரை நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.