Washington Sundar Catch: நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் பிடித்த கேட்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


போட்டியின் ஐந்தாவது ஓவரின் இறுதிப்பந்தினை வாஷிங்டான் சுந்தர் வீச, அதை மார்க் சாப்மன் அடிக்க அதை  வாஷிங்டன் மின்னல் வேகத்தில் பறந்து பிடிக்க, அவர் அவுட் ஆனார். இந்த கேட்ச் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 


 






இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை இழந்துள்ள நிலையில், முதலாவது டி20 போட்டியில் இன்று இந்தியாவுடன் களமிறங்கியுள்ளது. தோனியின் சொந்த மைதானமான ராஞ்சியில் ஜே.எஸ்.சி.ஏ. சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.


இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இந்திய அணியும், சான்ட்னர் தலைமையில் நியூசிலாந்து அணியும் களமிறங்கியுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக்பாண்ட்யா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு பின் ஆலன் – கான்வே ஜோடி சிறப்பான தொடக்கம் அளித்தனர்.


ஒருநாள் தொடரில் ஜொலிக்காத ஆலன் இந்த போட்டியில் அதிரடியாக ஆடினார். அவர் 23 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய மார்க் சாப்மன் வாஷிங்டன் வீசிய அதே ஓவரில் தடுமாறினார். பின்னர், அதே ஓவரின் கடைசி பந்தில் அவர் அடித்த பந்தை வாஷிங்டன் சுந்தர் அந்தரத்தில் பாய்ந்து அபாரமாக கேட்ச் பிடித்தார். 43 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணிக்காக கான்வே – பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தனர்.


பிலிப்ஸ் நிதானமாக ஆட கான்வே ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விளாசினார். மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களை காட்டிலும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்ததால் ஹர்திக் பாண்ட்யா சுழற்பந்துவீச்சாளர்களையே அதிகம் பயன்படுத்தினார். வாஷிங்டன் சுந்தர், தீபக்ஹூடா, குல்தீப் யாதவ் ஆகியோர் வீசினர்.


குல்தீப் யாதவ்வும், வாஷிங்டன் சுந்தரும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார். இருப்பினும் நியூசிலாந்து அணிக்காக நிதானம் ஆடிய கான்வே 31 பந்துகளில் அரைசதம் விளாசினார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கான்வே 52 ரன்களில் அர்ஷ்தீப் பந்தில் அவுட்டானார். அவர் 35 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்தார்.


அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ப்ராஸ்வெல் களமிறங்கினார். ஆனால், அவரை ப்ராஸ்வெல் 1 ரன் எடுத்திருந்தபோது அவரை இஷான்கிஷான் அபாரமாக ரன் அவுட் செய்தார். அடுத்து வந்த கேப்டன் சான்ட்னரும் 7 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி கட்டத்தில் மிட்செல் அதிரடி காட்டினார்.


ஷிவம் மாவி வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் மிட்செல் சிக்ஸர் விளாச, அந்த பந்து நோ பாலாக மீண்டும் அந்த பந்தில் மிட்செல் சிக்ஸர் விளாசினார். அடுத்த பந்தையும் அவர் சிக்ஸராக விளாச நியூசிலாந்து ரன் எகிறியது. 3வது பந்து பவுண்டரிக்கு சென்றது. மேலும், அவரும் அரைசதத்தை விளாசினார். 4வது பந்து டாட் பாலாக மாற, 5வது பந்தில் 2 ரன்கள் எடுத்தனர். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க நியூசிலாந்து அணி அந்த ஓவரில் மட்டும் 27 ரன்கள் எடுத்தது.


இதனால், இந்திய அணிக்கு 177 ரன்கள் இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்தது. டேரில் மிட்செல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 3 பவுண்டரி 5 சிக்ஸருடன் 59 ரன்கள் எடுத்தார்.