IND vs NZ Womens U19 WC: 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலக்கோப்பை  கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.   இன்று (27/01/2023) நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணியும் நியூசிலாந்து மகளிர் அணியும் மோதிக் கொண்டன.


இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் தொடங்கிய நியூசிலாந்து  ஜூனியர் அணியால் இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை எதிர் கொள்ள முடியாமல், தட்டுத் தடுமாறி 9 விக்கெட்டுகளை இழந்து  107 ரன்களை எடுத்தது. இதில் இந்திய ஜூனியர் அணியின் சார்பில், பர்ஷவி சோப்ரா நான்கு ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டன் ஓவர் உள்பட, 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் சாய்த்தார். அதேபோல் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஷவாலி வர்மா நான்கு ஓவர்கள் பந்து வீசி வெறும் ஏழு ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். 


இதன் பின்னர் களமிறங்கிய இந்திய மகளிர் ஜூனியர் அணி, குறைந்த ஸ்கோர் என்பதால், நிதானமாகவே ரன்களைச் சேர்த்து வந்தது. குறிப்பாக கிடைத்த பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டி ரன்கள் சேர்த்து வந்தனர். இந்திய அணியின் கேப்டன் ஷவாலி வர்மா அணியின் ஸ்கோர் 33 ரன்களாக இருந்தபோது விக்கெட்டை பறிகொடுத்தார்.  அதன் பின்னர் அணியின் ஸ்கோர் 95 ரன்களாக இருந்தபோது, இந்திய அணியின் மற்றொரு வீராங்கனை சௌமியா 26 பந்தில் 22 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். 14.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 






இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மகளிர் கிரிக்கெட்டுக்கான ரசிகர்கள் இந்திய அணி டி20 உலகக்கோப்பையில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளதை பாராட்டியும் கொண்டாடியும் வருகின்றனர். 


தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வந்த ஸ்வேதா ஷெஹ்ரவர்ட் 45 பந்தில் 61 ரன்கள் அதிரடியாக விளாசி, அதகளப்படுத்தினார். அவர் 10 பவுண்டரி விளாசினார். இந்த போட்டியில் இந்திய அணியின் சார்பில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியின் சார்பில் ஈஷி ஷார்ப் மட்டும் ஒரே ஒரு சிக்ஸர் பறக்கவிட்டுள்ளார். 


இந்த போட்டியில் இந்திய அணியின் பர்ஷவி சோப்ராவுக்கு ப்ளேயர் ஆஃப் த மேட்ச் வழங்கப்பட்டது.