ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடுவதற்காக நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு வந்துள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடிய விராட்கோலி இன்றைய போட்டியிலும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். விராட்கோலியின் சத வேட்டை இன்றும் தொடங்கினால் அவர் புதிய சாதனையை படைக்க வாய்ப்புள்ளது. விராட்கோலிக்கு மிகவும் பிடித்த அணிகளில் ஒன்றாக நியூசிலாந்து அணி உள்ளது.
அதிக சதங்கள்:
விராட்கோலி நியூசிலாந்து அணிக்கு எதிராக மட்டும் இதுவரை 26 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். அந்த போட்டிகளில் அவர் 1378 ரன்களை விளாசியுள்ளார். அதில் 8 அரைசதங்களும், 5 சதங்களும் அடங்கும். அசுர பார்மில் இருக்கும் விராட்கோலி இன்றைய போட்டியிலும் சதம் விளாசுவார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
விராட்கோலி இன்றைய போட்டியில் சதம் விளாசினால் ரிக்கி பாண்டிங் மற்றும் சேவாக்கின் சத சாதனையை சமன் செய்வார். நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசிய வீரர்களாக ரிக்கி பாண்டிங் மற்றும் சேவாக் உள்ளனர். சேவாக் நியூசிலாந்து அணிக்கு எதிராக 23 போட்டிகளில் ஆடி 6 சதங்களை விளாசியுள்ளார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 51 போட்டிகளில் ஆடி 6 சதங்களை விளாசியுள்ளார்.
புதிய சாதனை படைப்பாரா..?
இலங்கையின் அதிரடி பேட்ஸ்மேனாகிய ஜெயசூர்யா 47 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 சதங்களை விளாசியுள்ளார். விராட்கோலி இதுவரை 26 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 சதங்களை விளாசியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 42 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 சதங்களை விளாசியுள்ளார். இன்றைய போட்டியில் சதம் விளாசினால் நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சேவாக் மற்றும் பாண்டிங்குடன் பகிர்ந்து கொள்வார்.
மேலும், ஒருநாள் போட்டியில் அதிக சதமடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடிக்க விராட்கோலிக்கு இன்னும் 4 சதங்கள் மட்டுமே தேவைப்படுவதால் இந்த போட்டி மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியில் விராட்கோலி 2 சதங்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:IND VS NZ: இன்று தொடங்குகிறது இந்தியா Vs நியூசிலாந்து ஒருநாள் தொடர்.. வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி?
மேலும் படிக்க: IND vs NZ ODI: முதுகு வலியால் வெளியேறிய ஷ்ரேயாஸ் ஐயர்.. நியூசிலாந்து எதிராக புது அதிரடி வீரரை களமிறக்கிய இந்தியா..!