நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலி தனது விக்கெட்டை இழந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாட உள்ளது. அதன்படி இன்று முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் கண்ட இந்திய அணியில் தொடக்க வீரர் சுப்மன் கில் அதிரடியாக ஆடி இரட்டை சதமடித்தார். 






மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில் சுப்மன் கில் 208 ரன்கள் குவித்தார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது.  பந்து வீச்சை பொறுத்தவரை டேரி மிட்செல், ஹென்ரி ஷிப்லி தலா 2 விக்கெட்டுகளையும், பெர்குசன், டிக்னெர், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. 


இந்த போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலி 8 ரன்களில் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தான் அவுட்டான விதத்தைக் கண்டு விராட் கோலி அதிருப்தியடைந்தார். அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததைக் கண்ட மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் விராட் கோலி அவுட்டான தருணம் மைதானத்தில் அமைதி நிலவியது. 






தனது கடைசி நான்கு போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்த விராட் கோலி மீது இப்போட்டியிலும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு விராட் கோலி இடது கை சுழற்பந்து வீச்சாளராக வெளியேற்றப்படுவது இது ஐந்தாவது முறையாகும். ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது முறையாக சாண்டனர் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.