நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 349 ரன்கள் குவித்து அசத்தியது. இதில் தொடக்க வீரர் சுப்மன் கில் இரட்டை சதமடித்து அசத்தினார். 


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாட உள்ளது. அதன்படி இன்று முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். 






இதில் ரோகித் சர்மா 34 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் விராட் கோலி 8 ரன்களும், இஷான் கிஷன் 5 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்தாலும் மறுபுறம் தொடக்க வீரர் சுப்மன் கில் ஒன் மேன் ஆர்மியாக நியூசிலாந்து பந்து வீச்சை பதம் பார்த்தார். அவருக்கு பக்கப்பலமாக சூர்யகுமார் யாதவ் (31 ரன்கள்) ,ஹர்திக் பாண்ட்யா (28 ரன்கள்) இருக்க 87 பந்துகளில் சதத்தை எட்டிய சுப்மன் கில், 146 பந்துகளில் இரட்டை சதமடித்து அசத்தினார். இதில் 19 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் பறந்தன. 






இறுதியாக அணியின் ஸ்கோர் 345 ரன்களை எட்டிய போது சுப்மன் கில் 208 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது. அதேசமயம் பந்து வீச்சை பொறுத்தவரை டேரி மிட்செல், ஹென்ரி ஷிப்லி தலா 2 விக்கெட்டுகளையும், பெர்குசன், டிக்னெர், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 


சொல்லப்போனால் சுப்மன் கில் தவிர்த்து அணியில் களம் கண்ட 9 வீரர்களும் சேர்த்தே 128 ரன்கள் மட்டுமே அடித்தனர். எக்ஸ்ட்ரா வகையில் 13 ரன்கள் இந்திய அணிக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.