India vs Nepal Highlights: ஆசியக் கோப்பைத் தொடர் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்கியது. இதில் பாகிஸ்தான் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து இந்த ஆண்டு ஆசிய கோப்பையை நடத்துகின்றன. இதில் இந்த இரண்டு நாடுகளுடன் இந்தியா, நேபாளம், வங்காளதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் களமிறங்கியுள்ளன. இதில் குரூப் ஏ மற்றும் குரூப் பி என ஒரு குழுவிற்கு 3 அணிகள் என பிரிக்கப்பட்டுள்ளது. 6 லீக் போட்டிகள் உட்பட 13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இதுவரை 4 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மட்டும் மழையால் கைவிடப்பட்டது.


இந்நிலையில் இலங்கையில் உள்ள பல்லேகேலே மைதானத்தில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இப்படியான நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிங்கிய நேபாளம் அணிக்கு தொடக்கத்தில் அதிஷ்டம் மேல் அதிஷ்டம் காத்திருந்தது. 


அதாவது முதல் ஓவர், இரண்டாவது ஓவர் மற்றும் ஐந்தாவது ஓவர்களில் இந்திய அணியினர் மூன்று கேட்ச் வாய்ப்புகளை வீணடித்தனர். இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட நேபாளத்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினர். 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 65 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ, இந்தியாவின் ஆதிக்கம் மெல்ல மெல்ல அதிகரித்தது. 


இருந்தாலும், நேபாளம் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆஷிஃப் ஷேக் 97 பந்தில் 7 பவுண்டரி விளாசி 58 ரன்கள் சேர்த்த நிலையில், முகமது சிராஜ் பந்து வீச்சில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். ஆஷிஃப் ஷேக் இந்திய அணிக்கு எதிராக முதல் அரைசதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 


அதன் பின்னர் அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் நேபாளம் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளைய்ம் இழந்து 230 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும்  முகமது ஷமி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருந்தனர்.