டி20 உலகக் கோப்பை 2024 எட்டாவது போட்டியில் இன்று இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பேட்டிங்கை தொடங்கிய அயர்லாந்து அணி 16 ஓவர்கள் முடிவில் 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து ஆட்டமிழந்தது. 


97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ரன் மெஷின் என்ற அழைக்கப்படும் விராட் கோலி 1 ரன்னில் மார்க் எய்டர் பந்துவீச்சில் பெஞ்சமின் வொயிட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 


அதன்பிறகு, ரோஹித் சர்மாவும், ரிஷப் பண்டும் இணைந்து இந்திய அணியின் வெற்றியை எளிதாக மாற்றினர். இருவரும் அவ்வபோது கிடைத்த பந்துகளை பவுண்டரியும், சிக்ஸர்களாக மாற்ற, இந்திய அணி 9 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களை தொட்டது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட ரோஹித் சர்மா 36 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உதவியுடன் 50 ரன்களை கடந்தார். 






அதனை தொடர்ந்து கூடுதலாக 2 ரன்களை எடுத்து ரிட்டயர் ஹர்ட் மூலம் வெளியேறினார் ரோஹித் சர்மா. அதன்பின், 59 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவை என்ற நிலையில், ரிஷப் பண்ட் ஜோஸ்வா லிட்டில் வீசிய 11வது ஓவரில் ஒரு சிக்சரை அசால்ட்டாக பறக்கவிட்டார். 


51 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தபோது, அவசரபட்ட சூர்யகுமார் யாதவ் 2 ரன்களில் அவுட்டாகி நடையைக்கட்ட, மெக்கர்த்தி வீசிய 13 ஓவரில் ரிஷப் பண்ட் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார். 


ரிஷப் பண்ட் 26 பந்துகளில் 36 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அயர்லாந்து சார்பில் மார்க் அய்டர் மற்றும் பெஞ்சமின் தலா 1 விக்கெட்களை எடுத்திருந்தனர்.


அயர்லாந்து அணி பேட்டிங் செய்தபோது 3 ஓவர்கள் வீசி 6 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 2 விக்கெட்களை அள்ளிய பும்ரா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 






முதல் இன்னிங்ஸ்:


இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 96 ரன்களுக்குச் சரிந்தது. அயர்லாந்து அணியின் 4 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தை கடந்தனர்.  மீதமுள்ள 7 பேட்ஸ்மேன்கள் தங்களது பேட்டிங்கில் 10 ரன்கள் கூட எடுக்கவில்லை. அயர்லாந்து அணி சார்பில் அதிகபட்சமாக கரேத் டெலானி 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தார். 


இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்களும், அதேசமயம் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.