டி20 உலகக் கோப்பை 2024ல் இன்று அதாவது ஜூன் 5ம் தேதி, இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. மேலும், 2024 டி20 உலகக் கோப்பையில் இது எட்டாவது போட்டியாகும். இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது. 
 
முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும்  பால்பிர்னி ஆகியோர் அயர்லாந்துக்காக ஓபன் செய்ய வந்துள்ளனர். 


மூன்றாவது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அயர்லாந்துக்கு முதல் விக்கெட்டை எடுத்தார் அர்ஷ்தீப் சிங். அர்ஷ்தீப் பந்தில் அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங் 6 பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து  விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-டிடம் கேட்ச் அவுட் ஆனார். தொடர்ந்து அதே ஓவரின் கடைசி பந்தில் பால்பிர்னியை போல்டாக்கினார். 3 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணியின் ஸ்கோர் இரண்டு விக்கெட்டுக்கு 9 ரன்களாக இருந்தது. 


அடுத்தடுத்து இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். ஆறாவது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா ரன் ஏதும் கொடுக்கவில்லை. 6 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 2 விக்கெட்டுக்கு 26 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து 28 ரன்களில் மூன்றாவது விக்கெட்டை இழந்தது. ஏழாவது ஓவரில் ஹர்திக் பாண்டியா,  13 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்திருந்த லோரன் டக்கரரை அவுட் செய்தார். 






தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி அடுத்தடுத்து 4 விக்கெட்களை தூக்க, 11 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு வெறும் 49 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்ததாக வந்த அக்சார் படேல், தான் வீசிய 12 வது ஓவரில் மெக்கர்த்தியை அவுட் செய்ய, 13 வது ஓவர் வீசிய ஹர்திக் பந்தை டிலெனி மற்றும் ஜோஸ்வா லிட்டில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்டினர். 


15வது ஓவர் வீசிய பும்ரா, ஜோஸ்வா லிட்டிலை 14 ரன்களில் க்ளீன் போல்ட் செய்ய, ஒரு முனையில் டிலெனி மட்டும் அவ்வபோது பவுண்டரிகளை விரட்டி கொண்டிருந்தார். அர்ஷ்தீப் சிங் வீசிய 16 வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரை டிலெனி பறக்கவிட, அதே ஓவரில் ரன் அவுட்டாகி வெளியேறினார். 


இதையடுத்து அயர்லாந்து அணி 16 ஓவர்களில் 96 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. 


அயர்லாந்தின் இரண்டாவது குறைந்த ஸ்கோர்:


டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்தின் இரண்டாவது குறைந்த ஸ்கோராக இது அமைந்தது. முன்னதாக, 2010 உலகக் கோப்பையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அயர்லாந்து அணி வெறும் 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இப்போது 96 டி20 உலகக் கோப்பையில் அவரது இரண்டாவது குறைந்த ஸ்கோராகும். டி20 உலகக் கோப்பையில் 100 ரன்களுக்குள் இந்தியா அணி கட்டுப்படுத்திய நான்காவது அணி என்ற மோசமான சாதனையை அயர்லாந்து படைத்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளை இந்திய அணி 100 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியுள்ளது.