அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று டப்ளின் நகரில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் ஆடி வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள பும்ரா கேப்டனாக களமிறங்கினார்.
அடுத்தடுத்து விக்கெட்:
கேப்டனாக களமிறங்கிய பும்ரா இந்த போட்டியில் டாஸ் வென்றார். டாஸ் வென்ற பும்ரா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அவரது தேர்வு மிகச்சரி என்பது போல இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கம்பேக் கொடுத்த பும்ரா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் பந்திலே அதிரடி வீரர் பால்ப்ரைன் பவுண்டரி விளாசினார்.
ஆனால், அடுத்த பந்திலே பால்ப்ரைன் பும்ரா பந்தில் போல்டானார். அதே ஓவரில் வித்தியாசமான ஷார்ட் ஆட முயன்ற டக்கர் டக் அவுட்டாகினார். முதல் ஓவரிலே 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த அயர்லாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிர்லிங் – டெக்டர் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தது.
ஆஜால், டெக்டர் 9 ரன்னில் ஆட்டமிழக்க அபாயகரமான கேப்டன் ஸ்டிர்லிங் ரவி பிஷ்னோய் பந்தில் 11 ரன்னில் போல்டானார். இந்திய அணியின் வேகம், சுழலில் தாக்குப்பிடிக்க முடியாத அயர்லாந்து அணி 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்பு. காம்பெர் – அடெய்ர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. 9 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 50 ரன்களை எட்டியது.
மிரட்டிய காம்பெர் - மெக்கர்த்தி
காம்பெருக்கு கம்பெனி கொடுத்த அடெய்ர் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அயர்லாந்து அணி 100 ரன்களை கடக்குமா என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், காம்பெர் – மெக்கர்த்தி ஜோடி அபாரமாக ஆடியது. இருவரும் அயர்லாந்து அணி 100 ரன்களை கடக்க உதவினர். சிறப்பாக ஆடிய காம்பெர் 33 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
ஆனாலும், மெக்கர்த்தி அதிரடியாக ஆட முயற்சித்தார். அவர் மட்டையை சுழற்றிய சில பந்துகள் சிக்காவிட்டாலும் சில பந்துகள் பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் மாறின. கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் நோ பால் உள்பட சொதப்பலாக வீச மெக்கர்த்தி அசத்தினார். இதனால் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கம் என்று எதிர்பார்த்த அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்களை எடுத்தது. மெக்கர்த்தி கடைசி பந்தை சிக்ஸருக்கு விளாசி அபாரமான அரைசதத்தை விளாசினார். அவர் 33 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 51 ரன்களை எடுத்தார்.
இந்திய அணியின் கேப்டன் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நீண்ட இடைடெவளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய பும்ரா 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.