Virat Kohli இந்திய  கிரிக்கெட் மட்டுமல்ல உலக கிரிக்கெட்டுமே கொண்டாடும் அதிரடி கிரிக்கெட் வீரர் என்றால் அது விராட் கோலி தான். கிங் கோலி என அழைக்கப்படும் இவர் இந்திய அணிக்காக சர்வதேச அளவில் விளையடத் தொடங்கி இன்றுடன் அதாவது ஆகஸ்ட் 18ஆம் தேதியுடன் 15 வருடங்கள் ஆகிறது. 


19வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பைத் தொடரை இந்திய அணி விராட் கோலி தலைமையில் 2008ஆம் ஆண்டு வென்றது. அதன் பின்னர் இந்திய அணிக்கு தகுதி பெற்றார் விராட் கோலி. அதே ஆண்டில் ஆகஸ்ட் 18ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அன்றைய சீனியர் வீரர்களான கவுதம் கம்பீர், யுவராஜ் சிங், ஜாகீர் கான் உள்ளிட்டோருடன் தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் விராட் 22 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரி அடித்து 12 ரன்கள் சேர்த்த நிலையில், ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. 




இதுவரை 275 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 46 சதங்கள், 65 அரைசதங்களும், 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 7 இரட்டைச் சதங்கள், 29 சதங்களும் 29 அரைசதங்களும், அதேபோல் 115 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் இந்த வகை கிரிக்கெட்டில் 37 அரைசதங்களும் ஒரு சதமும் விளாசியுள்ளார். 


இதுவரை ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவில் இதுவரை 76 சதங்கள் விளாசி சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் சச்சின் தெண்டுல்கர் 100 சதங்களுடன் உள்ளார். அதேபோல், 131 அரைசதங்களும் விளாசியுள்ளார். அதேபோல் மூன்று வகை கிரிக்கெட்டிலும் சேர்த்து இவதுவரை, 2 ஆயிரத்து 533 பவுண்டரிகளும், 280 சிக்ஸர்களும் விளாசியுள்ளார்.  இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் 12 ஆயிரத்தை 898 ரன்களும்,  டெஸ்ட் போட்டிகளில் 8 ஆயிரத்து 676 ரன்களும் விளாசியுள்ளார். டி20 போட்டிகளில்  4 ஆயிரத்து எட்டு ரன்கள் அடித்துள்ளார். தொடர்ந்து விளையாடி வரும் விராட் கோலி தற்போது ஐசிசி பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் 19வது இடத்தில் உள்ளார். 




இவரது ஆக்ரோஷமான பேட்டிங்கினால் இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார். 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றபோது அணியில் இருந்த விராட், 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியை வழிநடத்தினார். இந்த தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டி வரை சென்றது. அதேபோல் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிவரை சென்ற இந்திய அணி தோல்வியைத் தழுவியது. சச்சின் தெண்டுல்கரின் சாதனையை ஒருவரால் முறியடிக்க முடியும் என்றால் அது விராட் கோலியால்தான் முடியும் என கிரிக்கெட் உலகமே கொண்டாடி வரும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் உலகில் தனக்கான சாம்ராஜியத்தை கட்டமைக்கத் துவங்கி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகிறது.