இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி. ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு சிறிய ஓய்வுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் மீண்டும் அணிக்கு திரும்பினார். தென்னாப்பிரிக்க தொடர், ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் தற்போது விராட் கோலி ஆடி முடித்துள்ளார்.
விராட் கோலி விலகல்:
இந்த நிலையில், இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இங்கிலாந்து அணி இதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் ஆடுகின்றனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் என்ற அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, அவர் இந்திய கேப்டன் ரோகித்சர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
என்ன காரணம்?
தனது தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக விராட் கோலி முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆடுவதில் இருந்து ஓய்வு கேட்டிருப்பதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. விராட் கோலி முதல் 2 டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஏனென்றால் இங்கிலாந்து போன்ற பலமிகுந்த அணியை எதிர்கொள்ள விராட் கோலி போன்ற ஒரு அனுபவமிக்க பேட்ஸ்மேன் இல்லாதது இந்திய அணியை பாதிக்கும். விராட் கோலி இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, 2016ம் ஆண்டு நடந்த உள்நாட்டு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி 5 டெஸ்ட் போட்டியில் 2 சதங்கள், 2 அரைசதங்கள் உள்பட 655 ரன்கள் குவித்து அந்த தொடரிலே அதிக ரன்கள் விளாசிய வீரராக திகழ்ந்தார். விராட் கோலி இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக 28 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 சதங்கள், 9 அரைசதங்கள் உள்பட 1991 ரன்களை எடுத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 235 ரன்கள் ஆகும். இதில் 3 முறை நாட் அவுட்டாக திகழ்ந்துள்ளார். விராட் கோலி 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 29 சதங்கள், 7 இரட்டை சதங்கள், 30 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 848 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND vs ENG: இந்திய மண்ணில் 12 ஆண்டுகால வறட்சியை முறியடிக்குமா இங்கிலாந்து..? புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
மேலும் படிக்க: Cheteshwar Pujara: முதல் தர போட்டியில் 20,000 ரன்கள்.. கவாஸ்கர், சச்சின், டிராவிட்டின் சிறப்பு கிளப்பில் நுழைந்த புஜாரா!