சேதேஷ்வர் புஜாராவின் 66 ரன்கள் மற்றும் சிராக் ஜானியின் 5 விக்கெட்கள் மூலம் ரஞ்சி டிராபியில் விதர்பாவுக்கு எதிராக 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மகாராஷ்டிராவை வீழ்த்தியது. இந்த சீசனில் இரு அணிகளும் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளன. 






எலைட் குரூப் - ஏ பிரிவில் சவுராஷ்டிரா அணிக்காக 66 ரன்கள் எடுத்ததன் மூலம் புஜாரா, முதல் தர கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்கள் எடுத்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கட், சினி கவாஸ்கர், ராகுல் டிராவிட் ஆகியோட் இந்த சாதனையை படைத்துள்ளனர். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் முதல் தர கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். சுனில் கவாஸ்கர் இதுவரை 348 முதல் தர போட்டிகளில் விளையாடி 51.46 சராசரியில் 81 சதங்கள் உதவியுடன் 25835 ரன்கள் எடுத்துள்ளார். 


சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். சச்சின் இதுவரை 310 முதல் தர போட்டிகளில் 81 சதங்களின் உதவியுடன் 25396 ரன்கள் குவித்துள்ளார். இதையடுத்து ராகுல் டிராவிட் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட் 298 முதல் தர போட்டிகளில் 55.33 என்ற சராசரி 68 சதங்கள் உதவியுடன் 23794 ரன்கள் எடுத்துள்ளார்.






இதற்கு அடுத்த இடத்தில் தற்போது சேதேஷ்வர் புஜாரா இணைந்துள்ளார். சேதேஷ்வர் புஜாரா 260 முதல் தர போட்டிகளில் விளையாடி 51.98 சராசரியில் 61 சதங்கள் மற்றும் 78 அரைசதங்களுடன் 20,013 ரன்கள் எடுத்துள்ளார். இதில், இவரது சிறந்த ஸ்கோர் 352 ரன்களாகும். இந்த நான்கு பேட்ஸ்மேன்களைத் தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் முதல் தர கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்ததில்லை. இதன் மூலம் சேதேஷ்வர் புஜாரா ஸ்பெஷல் கிளப்பில் என்ட்ரி கொடுத்துள்ளார்.


புஜாரா சமீபத்தில் முதல் தர கிரிக்கெட்டில் தனது 17 வது இரட்டை சதத்துடன் புதிய சாதனை படைத்தார். அவர் கடந்த ஜனவரி 7ம் தேதி அன்று ஜார்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபியின் தொடக்க போட்டியில் சவுராஷ்டிராவுக்காக பேட்டிங் செய்தபோது இந்த மைல்கல்லை எட்டினார். 


இந்தியாவுக்காக, புஜாரா 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்கள் மற்றும் 35 அரைசதங்களுடன் 43 சராசரியுடன் 7,195 ரன்கள் எடுத்துள்ளார். இவர் கடைசியாக இந்தியாவுக்காக கடந்த 2023 ஜூன் 2023 மாதம் ஒரு டெஸ்டில் விளையாடினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதி 2023 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸிலும் 14 மற்றும் 27 ரன்களை எடுத்த புஜாராவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால், இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


இந்தநிலையில், இங்கிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறாத இந்திய அணியின் அனுபவ வீரர் சேதேஷ்வர் புஜாரா, முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து சாதனைகளை முறியடித்து வருகிறார்.