IND VS ENG T20: கோலியின் சாதனைகளுக்கு ஆபத்து..! டி20 போட்டிகளில் இந்திய வீரர் திலக் வர்மா புதிய மைல்கல்
IND VS ENG T20: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய வீரர் திலக் வர்மா புதிய சாதனை படைத்தார்.

IND VS ENG T20: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய வீரர் திலக் வர்மா கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்திய அணி திணறல்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்ச தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 45 ரன்களை சேர்த்தார். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் 78 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அணியின் வெற்றி கேள்விக்குறியானது.
ஆட்டநாயகன் திலக் வர்மா:
இருப்பினும் மறுமுனையில் இளம் வீரர் திலக் வர்மா நிலைத்து நின்று ஆடினார். சீரான் இடைவெளியில் பவுண்டர் மற்றும் சிக்சர்களை விளாசினார். அவருக்கு பக்க பலமாக வாஷிங்டன் சுந்தரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், இந்திய அணி மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீண்டது. 26 ரன்கள் சேர்த்து இருந்தபோது, வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்தார். இருப்பினும் திலக் வர்மாவை ஆட்டமிழக்கச் செய்ய, இங்கிலாந்து அணி எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. அதன் விளைவாக இங்கிலாந்திற்கு பிரகாசமாக இருந்த வெற்றிவாய்ப்பு, இந்தியா பக்கம் திரும்பியது. இறுதியில் 19.2 ஓவர்களிலேயே இந்திய அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய திலக் வர்மா இறுதி வரை ஆட்டமிழக்காமல், 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் உட்பட 72 ரன்களை விளாசி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியால் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில், 2-0 என முன்னிலை வகிக்கிறது.
கோலியின் சாதனை முறியடிப்பு:
நெருக்கடியான சூழலில் இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றதோடு, சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து ஆட்டமிழக்காமல் அதிக ரன்களை சேர்த்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளர். சேப்பாக்கம் போட்டிக்கு முன்னதாக அவர் களமிறங்கிய 3 போட்டிகளிலும் ஆட்டமிழக்காமல், முறையே 19,120 மற்றும் 107 ரன்களை விளாசி இருந்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் தொடர்ந்து ஆட்டமிழக்காமல், 318 ரன்களை குவித்துள்ளார். முன்னதாக இந்த சாதனை, நியூசிலாந்து வீரர் மார்க் சாப்மன் (271 ரனக்ள்) தன்வசம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு, இந்தியா சார்பில் சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து 4 இன்னிங்ஸ்களில் ஆட்டமிழக்காமல் அதிக ரன்கள் குவித்து விராட் கோலி (258), சஞ்சு சாம்சன் (257), ரோகித்சர்மா (253), மற்றும் ஷிகர் தவான் (252) ஆகியோரின் சாதனகளையும் திலக் வர்மா முறியடித்துள்ளார்.