அடிலெய்ட் மைதானத்தில் இன்று நடைபெற்ற உலககோப்பை டி20 போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக பேட்டிங் செய்து 168 ரன்களை விளாசினாலும், பந்துவீச்சு சுத்தமாக எடுபடாத காரணத்தால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.




உலககோப்பையை வெல்லும் அணி என்று கணிக்கப்பட்ட இந்திய அணி எதிரணியின் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றாமல் தோல்வி அடைந்தது பெரும் வேதனையை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டிக்கு பிறகு, மிகுந்த சோகத்துடன் பெவிலியனில் அமர்ந்திருந்த கேப்டன் ரோகித்சர்மா வேதனை தாங்க முடியாமல் கண்ணீர் சிந்தினார்.






மிகுந்த விரக்தியில் அமர்ந்திருந்த ரோகித்சர்மா கண்ணீர் சிந்தியது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், அவரை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தோளில் தட்டி ஆறுதல் கூறினார். ஐ.பி.எல், தொடரில் ஜாம்பவான் அணியான மும்பை இந்தியன்ஸ் ரோகித் சர்மா தலைமையில் 5 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.


ரோகித் சர்மா இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு இந்திய அணி, எந்தவொரு மிகப்பெரிய தொடரையும் கைப்பற்றவில்லை. ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாமல் வெளியேறியது. நடப்பு உலககோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் எனறு எதிர்பார்த்த நிலையில், தற்போது இந்திய அணி வெளியேறியுள்ளது.


டி20 போட்டிகளில் ரோகித்சர்மா தலைமையில் இந்திய அணி பல போட்டிகளில் வெற்றி பெற்றாலும், முக்கியமான ஆட்டங்களில் தோல்வி அடைந்து வெளியேறுவது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.