அடிலெய்டில் நடைபெற்ற உலககோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் ஹர்திக் பாண்ட்யா, விராட்கோலி அபார பேட்டிங்கால் இந்திய அணி 168 ரன்களை எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரின் முதல் பந்திலே பவுண்டரியுடன் தொடங்கியது.
புவனேஷ்வர்குமார் வீசிய முதல் ஓவரிலே இங்கிலாந்து அணி 3 பவுண்டரிகளை விளாசியது. தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை அலெக்ஸ் ஹேல்ஸ் – ஜோஸ் பட்லர் இருவரும் விளாசினர். அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடி காட்ட கேப்டன் பட்லர் நிதானமாக ஆடினார். 3 ஓவர்களில் 33 ரன்களை எட்டிய இங்கிலாந்து 5 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது. பவர்ப்ளேவை கடந்த பிறகும் இங்கிலாந்து அணியின் பேட்டிங் வேகம் குறையவில்லை.
தொடர்ந்து அதிரடி காட்டிய அலெக்ஸ் ஹேல்ஸ் 28 பந்துகளில் அரைசதம் விளாசினார். இந்த ஜோடி அபாரமாக ஆடியதால் இங்கிலாந்தின் ரன் ரேட் மளமளவென எகிறியது. புவனேஷ்வர், அர்ஷ்தீப்சிங், அக்ஷர் படேல்., முகமது ஷமி, அஸ்வின், ஹர்திக் பாண்ட்யா என யாருடைய பந்துவீச்சும் எடுபடவில்லை. இதனால், இங்கிலாந்து அணி 14வது ஓவர்களிலே 150 ரன்களை கடந்தது.
இந்த போட்டியில் எந்த வாய்ப்பையும் தராத இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அளித்த ஒரே ஒரு கேட்ச் வாய்ப்பையும் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தவறவிட்டார். ஒரு விக்கெட்டை கூட இந்திய அணியினர் எடுக்காததால் மைதானத்தில் நிரம்பியிருந்த இந்திய ரசிகர்கள் சோகம் அடைந்தனர். பட்லரும், அலெக்ஸ் ஹேல்சும் பவுண்டரி, சிக்ஸர் என விளாசியதால் அவர்களது வெற்றி வாய்ப்பு மிக எளிதானது.
இதனால், இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 170 ரன்களை எட்டியது. கேப்டன் ஜோஸ் பட்லர் 49 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 80 ரன்களையும், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் 4 பவுண்டரி 7 சிக்ஸருடன் 86 ரன்களையும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணியில் முகமது ஷமி 3 ஓவர்களில் 39 ரன்களையும், ஹர்திக் பாண்ட்யா 3 ஓவர்களில் 34 ரன்களையும், புவனேஷ்வர் 2 ஓவர்களில் 25 ரன்களையும், அக்ஷர் படேல் 4 ஓவர்களில் 30 ரன்களையும், அஸ்வின் 2 ஓவர்களில் 27 ரன்களையும் வாரி வழங்கினர். கடந்த உலககோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், நடப்பு உலககோப்பையிலும் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.
மேலும் படிக்க : Virat Kohli 4000 Runs T20: வீரா வீரா.. வாடா வாடா.. புதிய வரலாறு படைத்த விராட்கோலி..! 4 ஆயிரம் ரன்களை கடந்த மாஸ் மொமெண்ட்..
மேலும் படிக்க : T20 world cup final: ”பாகிஸ்தானுக்கு தான் கப்; யாராலும் தடுக்க முடியாது” - இன்சமாம் உல் ஹக் கறார்..!