இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் மொயின் அலி 47 ரன்களும், வில்லே 41 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் சாஹல் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன்காரணமாக இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அடுத்து ஆடிய இந்திய அணி ரீஸ் டாப்லே வேகத்தில் இந்திய அணி 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இந்திய அணியின் தோல்வி மற்றும் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ரோகித் சர்மா சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அதில், “எத்தனை முறை தான் விராட் கோலி தொடர்பான கேள்வியை கேட்பீர்கள். இது தொடர்பான விவாதம் ஏன் நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை. அவர் இந்திய அணிக்காக அவ்வளவு ரன்கள் அடித்துள்ளார். அவருடைய சராசரி மற்றும் சதங்களை பார்த்தால் நமக்கு தெரியும். அவருடைய அனுபவம் மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு வீரரின் வாழக்கையில் எப்போதும் சில இறங்கு முகங்கள் இருக்கும். அது அவருடைய சொந்த வாழ்க்கையிலும் இருக்கும்.
அவர் இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக பல போட்டிகளில் விளையாடி வருகிறார். அவர் ஒரு சிறப்பான வீரர். அதை அவர் மீண்டும் நிரூபிக்க தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை இவர் மீண்டும் ஃபார்மிற்கு திரும்ப ஒரிரு நல்ல இன்னிங்ஸ் போதுமான ஒன்று அதுவே என்னுடைய எண்ணமாக உள்ளது. நன்றாக கிரிக்கெட் விளையாட்டை பின் தொடர்பவர்களும் இதேயே நினைப்பார்கள் என்று கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கபில்தேவ் இடம் கேட்கப்பட்டது. அதற்கு கேப்டன் ரோகித் சர்மா, “அவர் வெளியே இருந்து போட்டியை பார்த்து வருகிறார். அவருக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியாது. நாங்கள் அணியை கட்டமைப்பதற்கு பின்பாக பல விஷயங்கள் உள்ளன. வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். இது பற்றி வெளியே இருப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆகவே வெளியே நடப்பது எதுவும் எங்களுக்கு முக்கியமானதில்லை.
ஒரு வீரரின் ஃபார்ம் எப்போதும் ஒரு மாதிரியாக இருக்காது. அதில் சில ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது வழக்கம். ஒரு வீரர் பல ஆண்டுகள் சிறப்பாக விளையாடி வந்த பின்பு ஒரிரு தொடர்களில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் அவர் நல்ல வீரராக இல்லை என்று கூற முடியாது. அவருடைய கடந்த கால ஃபார்மை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. அணியிலுள்ள எங்களுக்கு வீரரின் முக்கியத்துவம் தெரியும். இதுப்பற்றி வெளியே இருப்பவர்கள் பேசலாம். ஆனால் அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட தேவையில்லை” எனத் தெரிவித்திருந்தார்.