உலககக் கோப்பைத் தொடரினை ஐசிசியுடன் இணைந்து  நடத்தும் இந்தியா, நடப்பு உலகக் கோப்பை சாம்பியனாக உள்ள இங்கிலாந்து அணிகள் லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்குச் செல்லும். ஆனால், இங்கிலாந்து அணி தோல்வியைச் சந்தித்தால் இந்த தொடரில் இருந்து வெளியேறுவதற்கான 90 சதவீதத்தினை உறுதி செய்யும். 


இப்படியான நிலையில் இரு அணிகளும் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணி இதற்கு முன்னர் விளையாடிய 5 போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்து வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


இந்திய அணியின் இன்னிங்ஸை தொடங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் மிகவும் நிதானமாகவே தொடங்கினர். ரோகித் சர்மாவிற்கு கேப்டனாக 100 ஒருநாள் போட்டி என்பது கூடுதல் சிறப்பு. முதல் இரண்டு ஓவர்கள் நிதான ஆட்டத்தினை ஆடிய இந்திய அணி அதன் பின்னர் ரோகித் சர்மா பவுண்டரி சிக்ஸர் என அதிரடி காட்டினார். ஆனால் இந்த அதிரடி தொடரும் என எதிர்பார்த்த நிலையில் சுப்மன் கில் தனது விக்கெட்டினை இழக்க, அதன் பின்னர் வந்த விராட் கோலி டக் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இதைத்தொடர்ந்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் நெருக்கடியை புரிந்துகொண்டு நிதானமாக விளையாடாமல் தேவையில்லாத ஷாட் ஆடி தனது விக்கெட்டினை இழக்க, இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பெரும் நெருக்கடியில் இருந்தது. 


இதையடுத்து வந்த கே.எல். ராகுல் கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து பொறுப்பாக விளையாடினார். பெரும் சரிவில் இருந்த அணியை மெல்ல மெல்ல மீட்ட இந்த கூட்டணி, ஸ்ட்ரைக்கை சிறப்பாக ரொட்டேட் செய்து வந்தனர். இதில் ரோகித் சர்மா அரைசதம் கடந்து விளையாடி வந்தார். அதேபோல் கே.எல். ராகுல் அரைசதம் விளாசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தபோது 39 பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 


அதன் பின்னர் பொறுப்பாக விளையாடி கேப்டன் இன்னிங்ஸ் ஆடிக்கொண்டு இருந்த ரோகித் சர்மா 87 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த ஜடேஜா, முகமது ஷமி தங்களது விக்கெட்டினை அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற, இந்திய அணி மீண்டும் நெருக்கடியைச் சந்திதது. 


இந்திய அணி 200 ரன்களைக் கடந்து ஓரளவுக்கு நல்ல ஸ்கோரினை எட்டவேண்டுமானால் களத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடவேண்டும். இப்படியான நிலையில், சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டினை இழக்காமல் விளையாட வேண்டும் என்ற மனநிலையில் ஒவ்வொரு பந்தையும் சிறப்பாக எதிர்கொண்டார். அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 49 ரன்களில் தனது விக்கெட்டினை இழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டினை இழந்து 230 ரன்கள் சேர்த்தது.