இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் முன்னிலை எடுத்தும் இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று இந்திய அணி இரண்டாவது முறையாக தோல்வி அடைந்துள்ளது. இதற்கு முன்பாக 2015ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 192 ரன்கள் முன்னிலை பெற்று இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. 


 


இந்நிலையில் 2021 மற்றும் 2022 இந்திய அணி வெளிநாடுகளில் பல்வேறு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்துள்ளது. அவற்றின் சிலவற்றை நாம் திரும்பி பார்ப்போம். 


 


2022ல் இந்தியா அடைந்துள்ள வெளிநாட்டு டெஸ்ட் தோல்விகள்:


 


ஜோகனஸ்பெர்க் டெஸ்ட்- 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி :


 


தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 229 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. இதனால் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணி 240 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


 


கேப்டவுன் டெஸ்ட்- 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி:


 


தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்து 13 ரன்கள் முன்னிலையை இந்திய அணிக்கு கொடுத்தது. எனினும் இந்திய அணி அதை சரியாக பயன்படுத்தாமல் 198 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற 212 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 





எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்- 7விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி:


இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் தொடரின் 5வது டெஸ்ட் போட்டி ஜூலை 1 முதல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய 416 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்து 132 ரன்கள் முன்னிலையை இந்திய அணிக்கு கொடுத்தது. எனினும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சரியாக பேட்டிங் செய்ய தவறியது. இதன்காரணமாக இங்கிலாந்து அணிக்கு 378 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜோ ரூட் மற்றும் பேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


 


தொடர் தோல்வி காரணம் என்ன?


 


2022ஆம் ஆண்டு தற்போது வரை இந்திய அணி வெளிநாடுகளில் 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. அவை அனைத்திலும் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது ஒரு மிகப்பெரிய ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் மோசமான பேட்டிங் தான். ஏனென்றால் பந்துவீச்சில் இந்திய சிறப்பாக அசத்தி வந்தாலும் பேட்டிங் சரியாக கை கொடுப்பதில்லை. இதன்காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களும் தடுமாறி வருகின்றனர். இலக்கு மிகவும் எளிதாக உள்ளதால் அதை எதிரணிகள் எளிதாக சேஸ் செய்து வெற்றி பெற்று வருகின்றனர்.