ஜனவரி 25 (நாளை) முதல் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணியை டெஸ்டில் தோற்கடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. கடந்த பத்து ஆண்டுகளில், இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் 14 டெஸ்ட் தொடர்களில் விளையாடி அனைத்து டெஸ்ட் தொடர்களையும் வென்றுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது இங்கிலாந்துக்கு பெரும் சவாலாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில், மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில், உள்நாட்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி சதவீதத்தை இந்திய அணி பெற்றுள்ளது. 


ஆனால், யாரும் எதிர்பார்க்காத வேளையில் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவை இங்கிலாந்து அணி தோற்கடித்த இக்கட்டான நிலையும் உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவை இங்கிலாந்து தோற்கடித்து தொடரை வென்று சாதனை படைத்தது. அதன்பிறகு, சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் எந்த அணியும் இந்தியாவை வீழ்த்த முடியவில்லை. தொடர்ந்து சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. 


இந்திய அணி ஆதிக்கம்:


கடந்த 10 ஆண்டுகளில் சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 75 சதவீத வெற்றியை பெற்று இந்திய அணி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், சொந்த மண்ணில் விளையாடி 70 சதவீத டெஸ்டில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் நியூசிலாந்து 69.23 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 64.44 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும், இங்கிலாந்து 56.06 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும், இலங்கை 50 சதவீதத்துடன் ஆறாவது இடத்திலும், வங்கதேசம் 35 சதவீதத்துடன் ஏழாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 35 சதவீதத்துடன் எட்டாவது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் பாகிஸ்தான் 30.77 சதவீதத்துடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


கடைசியாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி:


கடந்த 2023ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா அணி கடைசி டெஸ்ட் தொடரை வென்றது. இதில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் 4 போட்டிகள் கொண்ட தொடரில் தோற்கடித்தது. இப்போது சொந்த மண்ணில் இந்திய அணியின் அடுத்த பணி இங்கிலாந்து அணியை சந்தித்து வெற்றிபெற துடிக்கும். 


இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் 2024: முழு அட்டவணை:



  1. இந்தியா vs இங்கிலாந்து முதல் டெஸ்ட்: வியாழன், 25 ஜனவரி 2024, ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியம் (காலை 9:30 IST).

  2. இந்தியா vs இங்கிலாந்து 2வது டெஸ்ட்: வெள்ளிக்கிழமை, 02 பிப்ரவரி 2024, டாக்டர் YS ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியம், விசாகப்பட்டினம் (காலை 9:30 IST).

  3. இந்தியா vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: வியாழன், 15 பிப்ரவரி 2024, சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், ராஜ்கோட் (காலை 9:30 IST).

  4. இந்தியா vs இங்கிலாந்து 4வது டெஸ்ட்: வெள்ளிக்கிழமை, 23 பிப்ரவரி 2024, JSCA இன்டர்நேஷனல் ஸ்டேடியம் காம்ப்ளக்ஸ், ராஞ்சி (காலை 9:30 IST).

  5. இந்தியா vs இங்கிலாந்து 5வது டெஸ்ட்: வியாழன், 7 மார்ச் 2024 இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், தர்மசாலா (காலை 9:30 IST).