இந்தியா - இங்கிலாந்து:
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான பயிற்சியில் தற்போது இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கங்குலியின் சாதனையை முறியடிப்பாரா ரோகித் சர்மா?
இச்சூழலில், கடந்த 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்ததில்லை என்ற சாதனையுடன் இருக்கிறது. ஆனால், இந்த முறை எப்படியும் இந்திய அணியை வீழ்த்தி விட வேண்டும் என்ற முனைப்பில் இங்கிலாந்து அணியினர் களம் காண உள்ளனர். குறிப்பாக இங்கிலாந்து அணி அண்மையில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுவருவதால் இந்த முறை இந்தியாவை வீழ்த்திவிடாலம் என்று நினைக்கிறது.
இதனிடையே, இந்த டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முன்னாள் கேப்டன் கங்குலியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அந்த வகையில் ரோகித் சர்மா இன்னும் 156 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இருக்கும் கங்குலியின் சாதனையை முறியடித்து விடுவார். கங்குலி சர்வதேச கிரிக்கெட்டில் 18, 575 ரன்கள் எடுத்துள்ள வேளையில், தற்போது ரோகித் சர்மா 18,420 ரன்களில் இருக்கிறார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா 156 ரன்கள் எடுத்துவிட்டால் கங்குலியை பின்னுக்கு தள்ளிவிடுவார். இந்த பட்டியலில் 34,357 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், 26,733 ரன்களுடன் விராட் கோலி இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.
மேலும் படிக்க: India vs England Test: இங்கிலாந்திடம் பாஸ்பால் இருந்தால் எங்களிடம் விராட் பால் இருக்கு...! சுனில் கவாஸ்கர்!
மேலும் படிக்க: Rohit Sharma: இன்னும் 3 சிக்ஸர்கள்.. ஒரு கேப்டனாக தோனியின் சாதனையை முறியடிப்பாரா ஹிட்மேன் ரோஹித் சர்மா?