BCCI Awards :


பிசிசிஐ விருதுகள் 2024:


கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய பயிற்சியாளர்கள், கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நாள், முன்னாள் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். 2019 முதல் 2023 ஆண்டு வரையிலுமான நான்கு ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.


16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி சீனியர் வீரர்கள் மற்றும் வீரங்கனைகளுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் முக்கியமாக பாபா அபராஜித் லாலா அமர்நாத் விருது பெற்றார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அதேபோல், உனத்கட், மயங்க் அகர்வால், சர்ஃப்ராஸ் கான், ரியான் பராக் ஆகியோர்  உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் விருது பெற்றனர்.






2022-23 சீசனில் சிறந்த விக்கெட் டேக்கராக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது அதிக ரன்கள் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தீலீப் சர்தேசாய் விருது வழங்கப்பட்டது. மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் பிரியா பூனியா, ஷெஃபாலி, மேக்னா, அமன்ஜோத் கவுர் மற்றும் ஆடவர் கிரிக்கெட்டில் மயங்க் அகர்வால், அக்சர் படேல், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் தங்களது சர்வதேச அறிமுக போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்துக்காக விருது பெற்றனர்.


இரண்டு விருதுகளை வென்ற அஸ்வின்:


மித்தாலி ராஜ் , ஹர்மன்ப்ரீத், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த காரணத்துக்காகவும், பூனம் யாதவ், ஜுலான் கோஸ்வாமி, ராஜேஸ்வரி கெய்க்வாட் சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் வீழ்த்தியதாலும் விருது பெற்றனர். தீப்தி (2019-20, 2022-23), ஸ்மிருதி (2020-21, 2021-22) ஆகியோர் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை வென்றனர்.






ஆடவருக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதை முகமது ஷமி (2019-20), ரவிச்சந்திரன் அஸ்வின் (2020-21), ஜஸ்ப்ரித் பும்ரா (2021-22) மற்றும் சுப்மன் கில் (2022-23) ஆகியோர் வென்றனர். வாழ்நாள் சாதனையாளர் விருதை முன்னாள் வீரர்கள் ஃபரூக் இன்ஜினியர் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் பெற்றனர்.


மேலும் படிக்க: IND vs ENG Test: "அதுக்குத்தான் இருக்கேன்" ரோகித் சர்மாவுக்கு எதிராக ஸ்கெட்ச் போட்டுள்ள மார்க் வுட்!


மேலும் படிக்க: Rohit Sharma: "வெறும் 156 ரன்கள்தான்" கங்குலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் ரோகித் சர்மா! விவரம் உள்ளே!