Asian Para Games: சீனாவில் கடந்த 22ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வந்த ஆசிய பாரா விளையாட்டுகள் நேற்றுடன் நிறைவு பெற்றது.

ஆசிய பாரா விளையாட்டுகள்:

நான்காவது ஆசிய பாரா விளையாட்டுகள் சினாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த 22ம் தேதி தொடங்கியது.  நேற்றுடன் நிறைவுற்ற இந்த போட்டியில்  22 விளையாட்டுகளில் 24 பிரிவுகளில் 566 தங்கப் பதக்க நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் இந்தியா சார்பில் 196 ஆண்கள் மற்றும் 113 பெண்கள்  என 309 தடகள வீரர், விராங்கனைகள் பங்கேற்றனர். அவர்கள் 17 பிரிவுகளில் களமிறங்கி பதக்கங்களை வென்று அசத்தினர். துப்பாக்கிச் சுடுதல், படகுப் போட்டி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் இந்தியர்கள் பதக்கங்களை குவித்தனர்.

புதிய வராற்று சாதனை:

அதன்படி, இந்திய வீரர், வீராங்கனைகள் சேர்ந்து ஆசிய பாரா விளையாட்டில் மொத்தமாக 111 பதக்கங்களை வென்றனர். அதில் 29 தங்கம், 31 வெள்ளி மற்றும் 51 வெண்கலப்பதக்கங்கள் அடங்கும். பல விளையாட்டு போட்டிகள் சேர்ந்து நடைபெறும் ஒரு சர்வதேச நிகழ்வில், இந்தியா வென்ற அதிகபட்ச பதக்கங்களின் எண்ணிக்கை இதுவாகும். கடந்த செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற்ற, மாற்றுதிறனாளிகளுக்கு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா வென்ற 107 பதக்கங்களை காட்டிலும், 4 பதக்கங்கள் கூடுதலாக வென்று புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஆசிய பாரா விளையாட்டில் இந்தியா:

முதன்முறையாக கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டில் இந்தியா, ஒரு தங்கம் உட்பட 14 பதக்கங்களுடன் 15வது இடத்தை பிடித்தது. இரண்டாவது ஆசிய பாரா விளையாட்டில், பதக்கப் பட்டியலில் இந்தியா 9வது இடத்தை எட்டியது. 2018ம் ஆண்டு 72 பதக்கங்களை வென்து தான், ஆசிய பாரா விளையாட்டில் இந்தியாவின் சிறப்பான செயல்பாடாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டு, பதக்கங்களின் எண்ணிக்கை 3 இலக்கங்களை எட்டியுள்ளது. 

பதக்கப்பட்டியல்:

தரவரிசை நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 214 167 140 521
2 ஈரான் 44 46 41 131
3 ஜப்பான் 42 49 59 150
4 தென்கொரியா 30 33 40 103
5 இந்தியா 29 31 51 111
6 இந்தோனேஷியா 29 30 36 95
7 தாய்லாந்து 27 26 55 108
8 உஸ்பெகிஸ்தான் 25 24 30 79
9 பிலிப்பைன்ஸ் 10 4 5 19
10 ஹாங்காங் 8 15 24 47

குவியும் பாராட்டுகள் - அமைச்சர் பெருமிதம்:

ஆசிய பாரா விளையாட்டில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி, இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூரும் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ இந்திய வீரர், வீராங்கனைகளின் இந்த செயல்திறன் நமது விளையாட்டு வீரர்களின் கடின உழைப்பையும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் விளையாட்டில் சரியான கொள்கைகளை அறிமுகப்படுத்துவதையும் பிரதிபலிக்கிறது. அது அடிமட்ட அளவில் கேலோ இந்தியா திட்டமாக இருந்தாலும் சரி,  அல்லது உயரடுக்கு விளையாட்டு வீரர்களுக்கான இலக்கு ஒலிம்பிக் போடியம் திட்டமாக இருந்தாலும் சரி. அரசு திட்டங்களின்பலன் உண்மையில் இப்போது முடிவுகளைக் காட்டுகிறது. 2014 ஆம் ஆண்டிலிருந்து விளையாட்டு வரவு செலவு திட்டங்கள் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டு,  விளையாட்டு வீரர்களின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது” எனவும் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.