இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை நடக்கிறது. ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் ஹைதரபாத் மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகிறது. இந்த நிலையில், இந்திய அணியுடன் மோதும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


நாளை முதல் டெஸ்ட்:


இரு அணிகளும் மோதும் இந்த டெஸ்ட் போட்டி நடைபெறும் ஹைதரபாத் மைதானம் குறித்து கீழே விரிவாக காணலாம். ஹைதரபாத் மைதானம் கடந்த 2008ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு முதன்முதலில் 2010ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற்றது.


இந்த மைதானத்தில் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் முதலில் பேட் செய்த அணி 2 முறையும், முதலில் பந்துவீசிய அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானம் நல்ல பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கக்கூடிய மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் முதல் இன்னிங்சில் சராசரி 404 ரன்கள் ஆகும். இரண்டாவது இன்னிங்சின் சராசரி 377 ரன்கள் ஆகும். 3வது இன்னிங்சின் சராசரி 205 ஆகும். 4வது இன்னிங்சின் சராசரி 131 ஆகும்.


அதிக, குறைந்த ரன்கள்:


இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த சாதனை இந்திய அணிக்கே சேரும். இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிராக 687 ரன்கள் குவித்ததே இந்த மைதானத்தில் அதிக ரன்கள் ஆகும். இந்த மைதானத்தில் குறைந்த ரன்கள் எடுத்த அணியாக வெஸ்ட் இண்டீஸ் உள்ளது. அவர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்சம் ஆகும்.


இந்த மைதானத்தில் 2013ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதே பிரம்மாண்ட வெற்றியாகும். அதேபோல, நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் அதிக வெற்றியாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த முரளி விஜய், புஜாரா இந்த மைதானத்தில் 2 முறை சதம் அடித்துள்ளனர்.


தோல்வியே காணாத இந்தியா:


இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி பெருமை அஸ்வினுக்கே சேரும். அவர்  இந்த மைதானத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஜடேஜா 3 டெஸ்ட் போட்டியில் ஆடி 15 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்த மைதானத்தில் முரளி விஜய் – புஜாரா 2013ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 370 ரன்களை 2வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு குவித்துள்ளனர்.


இந்தியா இந்த மைதானத்தில் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. அதில் 4 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டி டிரா ஆகியுள்ளது. அஸ்வின் இந்த மைதானத்தில் 85 ரன்களை விட்டுக்கொடுத்து 12 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சிறந்த பந்துவீச்சு ஆகும். இந்தியாவுக்கு மிகவும் ராசியான மைதானத்தில் இந்திய அணி நாளை ஆடவிருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.



மேலும் படிக்க: Ind vs Eng Test Series: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இதுவரையிலான தனிநபர், அணியின் சாதனைகள், நேருக்கு நேர் முடிவுகள்


மேலும் படிக்க: IND vs ENG: டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றுவாரா ஆண்டர்சன்? காத்திருக்கும் அற்புத சாதனைகள்!