AFG vs SA T20 World Cup 2024 Semi-final Highlights: 2024 டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்கா அணியும் சிறப்பான பந்துவீச்சால் 11.5 ஓவர்களில் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அஸ்மத்துல்லா ஓமர்சாய் 10 ரன்கள் எடுத்திருந்தார். உமர்சாய் மட்டுமே அந்த அணிக்காக இரட்டை இலக்கை தொட்டார்.
தென்னாப்பிரிக்கா சார்பில் மார்கோ ஜான்சன் மற்றும் தப்ரேஸ் ஷம்சி அதிகபட்சமாக தலா 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர். இதுபோக, ரபாடா மற்றும் நோர்க்யா தலா 2 விக்கெட்களையும் எடுத்திருந்தனர்.
இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா:
57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு இலக்கை விரட்டி வெற்றிபெற்றது. இதன்மூலம், தென்னாப்பிரிக்கா அணி உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதியோடு வெளியேறியது.
முதல் முறையாக இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா:
57 ரன்கள் என்ற சிறிய இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்கா மோசமான தொடக்கத்தைப் பெற்றாலும், அந்த அணி ஒருதலைப்பட்ச வெற்றியைப் பெற்றது. ஃபசல்ஹக் ஃபரூக்கி வீசிய இரண்டாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் குயின்டன் டி காக்கின் விக்கெட் மூலம் தென்னாப்பிரிக்கா அணிக்கு முதல் விக்கெட்டை இழந்தது. டி காக் 8 பந்துகளில் 1 பவுண்டரி உதவியுடன் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால், அதன் பிறகு தென்னாப்பிரிக்கா அணிக்கு எந்த விக்கெட்டும் விழவில்லை.
பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் எய்டன் மார்க்ரம் ஆகியோர் 55* (43 பந்துகள்) ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தென்னாப்பிரிக்க அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். ரீசா ஹென்ட்ரிக்ஸ் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 29* ரன்களுடனும், கேப்டன் மார்க்ரம் 21 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 23* ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
சோக்கர்ஸ் என்ற அடையாளத்தை நீக்கிய தென்னாப்பிரிக்கா:
உலகக் கோப்பையை பொறுத்தவரை தென்னாப்பிரிக்கா அணி சோக்கர்ஸ் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. நாக் அவுட் போட்டிக்கு வரும் தென்னாப்பிரிக்கா அணி எப்போதும் ஏதேனும் ஒரு போட்டியில் தோற்றுவிட்டு வெளியேறிவிடும். ஆனால் இந்த முறை ஆப்பிரிக்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி சோக்கர்ஸ் என்ற அடையாளத்தை தன்னிடமிருந்து நீக்கியது.