டி20 உலகக் கோப்பை 2024ன் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இன்று இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் உள்ள கயானாவில் அமைந்துள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகள் மோதும் இந்த ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி காலை 10.30 மணிக்கும், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
டி20 உலகக் கோப்பையின் நாக் அவுட் போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் சாதனை சிறப்பாக இல்லை. 2024 ஆம் ஆண்டுக்கு முன் இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் 4 முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதில் 2 முறை மட்டுமே வெற்றி பெற்றது. இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி தனது பெயரில் சிறப்பான சாதனை ஒன்றை வைத்துள்ளார். அது இந்திய அணிக்கு மோசமான சாதனையாக பார்க்கப்படுகிறது. அது என்னவென்றால், இதுவரை டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் விக்கெட் எடுத்த கடைசி வீரர் கோலி மட்டும்தான் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? இதுவும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. கடந்த 2016 டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் இந்திய அணிக்காக கடைசியாக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக கிங் கோலி இருந்து வருகிறார்.
2016 டி20 உலகக் கோப்பை நாக் அவுட்டில் கடைசி விக்கெட்:
கடந்த 2016 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில், முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகள் மீதி இருந்த நிலையில், இலக்கை எட்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூன்றாவது மற்றும் கடைசி விக்கெட் ஜான்சன் சார்லஸின் விக்கெட் ஆகும். அந்த போட்டியில் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த சார்லஸ், விராட் கோலியின் பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனார். அதன்பிறகு, டி20 உலகக் கோப்பையின் எந்த நாக் அவுட் போட்டியிலும் எந்த இந்திய பந்து வீச்சாளராலும் விக்கெட் வீழ்த்த முடியவில்லை.
அதன் பிறகு 2021 உலகக் கோப்பையில் இந்திய அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. கடந்த 2022 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த செய்த இந்திய அணி 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. அதனை தொடர்ந்து, இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதையடுத்தும் இப்போது 2024 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா மீண்டும் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. விராட் கோலி எடுத்த அந்த விக்கெட்டுக்கு பிறகு, இந்த 8 ஆண்டுக்கு பின் இந்திய அணியின் எந்த பந்துவீச்சாளர் நாக் அவுட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்த இருக்கிறார் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.