IND Vs ENG 1st ODI: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா Vs இங்கிலாந்து - ஒருநாள் தொடர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் களமிறங்கியது. ஆனால், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி, அந்த தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் தான், இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இதற்காக இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்னோட்டமாக அமைந்துள்ள, இந்த தொடரை கைப்பற்ற இரு அணிகளும் முனைப்பு காட்டுகின்றன.
15 மாத காத்திருப்பு முடிவுக்கு வருமா?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி, மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் Disney+ Hotstar செயலி மற்றும் இணையதளத்திலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இந்திய அணி கடைசியாக 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில், வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு விளையாடிய 3 ஒருநாள் போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை. அதாவது 15 மாதங்களாக இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் வெற்றியையே பதிவு செய்யவில்லை. எனவே, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்றைய போட்டியில் வென்று கம்பேக் கொடுக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்திய அணியின் பலம், பலவீனம்
உள்ளூர் ரசிகர்கள் மற்றும் மைதானத்தின் சூழல் இந்திய அணிக்கு பெரும் பலமாக இருக்கும். கடந்த சில மாதங்களாக மோசமான ஃபார்மில் தவித்து வரும் கேப்டன் ரோகித் மற்றும் கோலி ஆகியோர், ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல் ஆகியோரும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு களத்தில் இறங்க உள்ளனர். நடுகள வீரர்களாக இவர்களது செயல்பாடு அணிக்கு மிகவும் அவசியம். முகமது ஷமி அணிக்கு திரும்பி இருந்தாலும், பும்ரா காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருப்பது பின்னடைவாக கருதப்படுகிறது.
நேருக்கு நேர்:
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரை, 107 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் இந்தியா 58 போட்டிகளிலும், இங்கிலாந்து 44 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் சமனில் முடிய, 3 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.
மைதானம் எப்படி?
நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானம் ஒரு சுத்தமான பேட்டிங் களமாகும். பேட்ஸ்மேன்கள் இங்கு களமிறங்குவதை மிகவும் விரும்புகின்றனர். ஸ்கொயரில் பவுண்டரி எல்லைகள் பெரியவை, மேலும் இது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும். அவர்கள் தங்களது வேகத்தால் பேட்ஸ்மேன்களை ஏமாற்றக்கூடும்.
உத்தேச பிளேயிங் லெவன்:
இந்தியா: ரோகித் சர்மா (கே), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல் (வி.கே.), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், வருண் சகரவர்த்தி
இங்கிலாந்து: பில் சால்ட்(வி.கே.), பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், அடில் ரஷீத், மார்க் வுட்