IND vs ENG: பேட்டிங் சொர்க்கபுரி நாக்பூர்! ரன்மழை பொழியப்போவது இந்தியாவா? இங்கிலாந்தா?

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நடைபெறும் நாக்பூர் மைதானம் பேட்டிங் சொர்க்கபுரியாக திகழ்கிறது.

Continues below advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. கடந்தாண்டு நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பிறகு இந்திய அணி ஆடும் ஒருநாள் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை இழந்த பிறகு விராட் கோலி, ரோகித் சர்மா களமிறங்கும் டெஸ்ட் தொடர் என்பதால் இந்த தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்:

இரு அணிகளும் மோதும் இந்த முதல் போட்டி மகாராஷ்ட்ராவில் உள்ள நாக்பூர் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த மைதானம் 2008ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த மைதானத்தில் மொத்தம் 45 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்க்கலாம். 

இந்த மைதானத்தில் இதுவரை 11 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது. இதில் முதலில் பேட் செய்த அணி 3 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சேசிங் செய்த அணி 8 முறை வெற்றி பெற்றுள்ளது. 

இந்தியாவின் கோட்டை:

இந்த மைதானத்தில் அதிக ரன் அடித்த அணி என்ற பெருமை இந்திய அணியையே சாரும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2009ம் ஆண்டு இந்தியா இந்த மைதானத்தில் 354 ரன்களை எடுத்திருந்தது. அந்த போட்டியில் தோனி 124 ரன்களை எடுத்திருந்தார். ரெய்னா 62 ரன்களும், கம்பீர் 76 ரன்களும் எடுத்திருந்தனர். அந்த போட்டியில் இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த மைதானத்தில் குறைந்த ரன்கள் எடுத்த அணியாக கனடா உள்ளது. 2011ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் கனடா அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 123 ரன்களை எடுத்தது. 

ரோகித், கோலி:

இந்த மைதானத்தில் அதிகபட்ச சேசிங்கையும் இந்திய அணி தன்வசம் வைத்துள்ளது. 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி இதே மைதானத்தில் முதலில் பேட் செய்து வாட்சன், ஜார்ஜ் பெய்லி சதத்தின் உதவியுடன் 350 ரன்களை எடுத்தது. இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ரோகித் 79 ரன்கள் எடுக்க, ஷிகர் தவான் 100 ரன்களை விளாசினார். 

அடுத்து வந்த கோலி 66 பந்துகளில் 18 பவுண்டரி 1 சிக்ஸருடன் 115 ரன்கள் எடுக்க இந்திய அணி 49.3 ஓவர்களில் 351 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

ரன்மழை பொழியுமா?

பேட்டிங் சொர்க்கபுரியான இந்த மைதானத்தில் நாளை ரன்மழை பொழியும் என்று எதிர்பார்க்கலாம். இங்கிலாந்து அணியில் பட்லர், பில் சால்ட், டக்கெட், ஹாரி ப்ரூக், லிவிங்ஸ்டன், பெத்தல் அதிரடி வீரர்கள் உள்ளனர். 

இந்திய அணியிலும் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப்பண்ட், கில், ஸ்ரேயாஸ், ஹர்திக் பாண்ட்யா போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால், நாளைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

Continues below advertisement