இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடி வரும் இந்திய அணி ரிஷப்பண்ட் அபார ஆட்டத்தால் 250 ரன்களை கடந்துள்ளது. டாஸ் வென்ற பென்ஸ்டோக்ஸ் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார். சுப்மன்கில் 17 ரன்களிலும், புஜாரா 13 ரன்களிலும் ஆட்டமிழக்க, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் கேப்டன் விராட்கோலி 11 ரன்களிலும், ஹனுமா விஹாரி 20 ரன்களிலும், இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 15 ரன்களிலும் அவுட்டாகினார்.






98 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 150 ரன்களை கடக்குமா? என்ற பரிதாப நிலை ஏற்பட்டது. அப்போது, ஜோடி சேர்ந்த ரிஷப்பண்ட் மற்றும் ஜடேஜா ஜோடி ஆட்டத்தையே மாற்றியது. ஜடேஜா நிதானமாக ஆட துணை கேப்டன் ரிஷப்பண்ட் அதிரடியாக ஆடினர். அவரது அதிரடியால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென எகிறியது. சிறப்பாக ஆடிய ரிஷப்பண்ட் 52 பந்துகளில் அரைசதம் விளாசினார்.





அரைசதத்திற்கு பிறகு ரிஷப்பண்ட் வேகம் குறையவில்லை. அவருக்கு மறுமுனையில் ஜடேஜா நல்ல ஒத்துழைப்பு அளித்தார். ரிஷப்பண்ட் பவுண்டரியாக விளாசினார். இருவரின் அதிரடியாலும் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. இந்திய அணிக்காக சிறப்பாக ஆடிய ரிஷப்பண்ட் 89 பந்துகளில் 15 பவுண்டரி 1 சிக்ஸருடன் 100 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்தும் அசத்தியுள்ளார். 






ஆட்டத்தின் மூன்றாவது செசன் முடிவின்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்களை கடந்து அசத்தியுள்ளது. ரிஷப்பண்ட் – ஜடேஜா கூட்டணியை பிரிக்க இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், மேட்டி பாட்ஸ், ஜேக் லீச் என அனைவரையும் பயன்படுத்தியும் பலனளிக்கவில்லை. ரிஷப்பண்ட் டெஸ்ட் போட்டியில் அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண