இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக கூறினார். இதையடுத்து, இந்தியாவின் இன்னிங்சை இளம்வீரர் சுப்மன்கில்லுடன் அனுபவ வீரர் சட்டீஸ்வர் புஜாரா தொடங்கினார். இருவரும் இணைந்து நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர்.
சுப்மன்கில் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனாலும், அணியின் ஸ்கோர் 27 ரன்களை எட்டியபோது சுப்மன்கில் 17 ரன்களில் அவுட்டாகினார். அவர் 24 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசிய 17 ரன்கள் எடுத்தநிலையில் அவுட்டாகினார். அவர் ஆட்டமிழந்த பிறகு ஹனுமா விஹாரி களமிறங்கினார். இருவரும் இணைந்து மிகவும் நிதானமாக ஆடினர்.
அப்போது, இந்தியா 17.5 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்த நிலையில் அந்த ஓவரின் கடைசி பந்தில் புஜாரா ஆட்டமிழந்தார். அவர் 46 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 13 ரன்கள் எடுத்தநிலையில் அவுட்டாகினார். பின்னர், ஹனுமா விஹாரியுடன் முன்னாள் கேப்டன் விராட்கோலி களமிறங்கினார். இருவரும் இணைந்து நிதானமாகவே ஆடினர். இந்திய அணி 20 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்திருந்தபோது உணவு இடைவேளை விடப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கியபோது மழை பெய்தது. இதனால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது வரை இந்திய அணி 20.1 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. ஹனுமா விஹாரி 46 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 14 ரன்களுடனும், விராட்கோலி 7 பந்தில் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியில் 8 ஓவர்கள் வீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மழை நின்ற பிறகு மீண்டும் இந்திய அணி தனது பேட்டிங்கைத் தொடர்ந்து ஆட உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்