இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்பட்டு வருகிறார். இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களை குவித்து அசத்தியுள்ளது. இதையடுத்து, முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி ஆடி வருகிறது.






இந்திய அணி 371 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது 9வது விக்கெட்டாக பும்ரா களமிறங்கினார். அவர் இறங்கியதும் சதமடித்த சிறிது நேரத்தில் ஜடேஜாவும் ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் 84வது ஓவரை இங்கிலாந்தின் முன்னணி பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசினார். அவர் வீசிய அந்த ஓவரில் மட்டும் இந்தியா எக்ஸ்ட்ரா உள்பட 35 ரன்கள் கிடைத்தது. எக்ஸ்ட்ராக்கள் தவிர்த்து பிராட் ஓவரில் 29 ரன்களை பும்ரா விளாசினார். டெஸ்ட் போட்டி வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற கிரிக்கெட் ஜாம்பவான் லாராவின் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார். 


அதாவது, பிராட் வீசிய முதல் பந்தில் பவுண்டரி விளாசினார். அடுத்த பந்தில் மட்டும் பிராட் 5 வைடுகளை வீசினார். மீண்டும் வீசப்பட்ட இரண்டாவது பந்தை பிராட் நோ பாலாக வீசினார். அந்த பந்தில் பும்ரா பிரம்மாண்ட சிக்ஸர் விளாசினார். மீண்டும் வீசப்பட்ட 2வது பந்தில் பும்ரா பவுண்டரி விளாசினார். மூன்றாவது பந்தில் மீண்டும் பும்ரா பவுண்டரி விளாசினார். நான்காவது பந்தில் பும்ரா மீண்டும் பவுண்டரி விளாசினார். 5வது பந்தில் பும்ரா மீண்டும் சிக்ஸர் விளாசினார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தார்.




இந்த ஓவரில் மட்டும் இந்தியாவிற்கு மொத்தம் 35 ரன்கள் கிடைத்தது, பும்ரா மட்டும் 29 ரன்களை எடுத்தார். கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரையன் லாரா கடந்த 2003ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அந்த அணியின் ராபின் பீட்டர்சன் வீசிய ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசினார். அதுவே டெஸ்ட் போட்டி வரலாற்றில் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இதுவரை உலக சாதனையாக இருந்து வந்தது.


இந்த நிலையில், லாராவின் 19 ஆண்டுகால சாதனையை பும்ரா இன்று முறியடித்தார். இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற தனது முதல் டெஸ்ட் போட்டியிலே பும்ரா உலகசாதனையை முறியடித்திருப்பதற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். பும்ராவின் இந்த அதிரடியால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களை குவித்தது. பும்ரா, லாராவிற்கு அடுத்தபடியாக ஒரே ஓவரில் அதிகபட்சமாக 2013ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ் பெய்லி ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் 28 ரன்களை விளாசியிருப்பார். 2020ம் ஆண்டு தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் இங்கிலாந்து பவுலர் ஜோ ரூட் பந்தில் 28 ரன்களை விளாசியிருப்பார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண